சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் வாக்களிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - ஆய்வுக் கட்டுரை

Published By: Priyatharshan

10 Dec, 2021 | 03:05 PM
image

1.  அறிமுகம்

சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தமது ஜனநாயக கடமையான வாக்களிப்பில் பங்கேற்பதிலிருந்து விலகியிருக்கும் நிலைமைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்திலுள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பல தொழிற்சாலைகள் காணப்படுகின்ற அதேவேளை, அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர்.

அவர்களின் பல உரிமைகள் மறுக்கப்படும் அதேவேளை, அவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்க எவருமில்லாத நிலைகாணப்படுகின்றது. அங்கு சில அமைப்புக்கள் குரல்கொடுக்கின்ற போதும் அவற்றுக்கான தீர்வு காலங்கடந்தும் கிடைப்பதாக தெரியவில்லை.

கட்டுநாயக்க சுதந்திரவர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஊழியர்களின் ஜனநாயக உரிமைப் பிரச்சினையாக வாக்களிக்கும் உரிமையிலிருந்து பல புறச்சூழல்களால் அந்தத் தொழிலாளர்கள் விலகி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் உள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தகவலய ஊழியர்கள் ஏன் வாக்களிப்பதில் இருந்து விலகிநிற்கின்றனர் என்றும் அவர்கள் விலகிநிற்பதற்கான புறச்சூழல்கள் எவை என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அதற்கான தீர்வாக மாற்றுவழியாக எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்துவதையே இந்த ஆய்வு இலக்காகக் கொண்டுள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பல தொழிற்சாலைகள் காணப்படுகின்றபோதும் நாம் இந்த ஆய்விற்காக 700 ஊழியர்கள் தொழில்புரியும் ஒரு தொழிற்சாலையொன்றில் தொழில் புரியும் ஊழியர்களிடமே இந்த ஆய்வை மேற்கொண்டோம்.

2. வாக்களிப்பில் கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள்

கம்பஹா தேர்தல் தொகுதியின் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் செய்யும் ஊழியர்கள் தொடர்ச்சியாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்பதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமாக 4 காரணங்கள் காணப்படுகின்றன.

1. வாக்களிப்பிடத்திற்கான தூரம்

2. விடுமுறை வழங்கப்படும் கால அளவு

3. விடுமுறை எடுக்கப்படும் போது கழிக்கப்படும் கொடுப்பனவு

4. வேட்பாளர் குறித்த போதிய அறிவின்மை மற்றும் அந்த நபரினால் எவ்வித நன்மையும் கிடைக்காமை

தேர்தல் காலங்களில் தேர்தலுக்காக வாக்களிப்பதற்கு விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவ்வாறு வழங்கப்படும் விடுமுறைகள் குறித்த சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு போதுமானதாக இல்லையென்கின்றார்கள்.

அத்துடன் மேலதிக விடுமுறைகளை தாம் எடுக்கும் போது மேலதிக கொடுப்பனவு, வருகைக்கொடுப்பனவு ஆகியன பெருமளவில் தமது சம்பளத்தில் கழிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

தாம் தேர்தல் காலங்களில் வாக்களிக்க பயணிக்கும் போது போக்குவரத்து செய்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பஸ், புகையிரதங்களில் சனக்கூட்டம் அலைமோதுவதால் நேரகாலத்திற்கு பணயத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

அவ்வாறு தாம் பயணத்தை மேற்கொண்டாலும் தமது சொந்த ஊருக்கு பயணிக்கும் போது வழமையாக அறவிடப்படும் பயணக் கட்டணத்தை போல் 3 மடங்கு கட்டணத்தை செலுத்தியே தாம் பயணத்தை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறிப்பிடுகின்றனர்.

எமக்கு தேர்தல்கள் காலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான போதிய தெளிவின்மையும் அவர்களிடத்தில் உள்ளது.

அத்துடன் அவ்வாறு வாக்குக் கேட்கும் வேட்பாளர்களால் எவ்வித நன்மையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு காணப்படுகின்றது.

அவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வாக்ளித்தாலும் அந்த வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெறும் போது அவர்கள் ஊழியர்கள் விடயத்தில் எவ்வித கரிசனையையும் காட்டுவதில்லை. இதனால் அவ்வாறானவர்களுக்கு வாக்களித்து என்ன நன்மையென்ற நிலையும் அவர்களிடத்தில் காணப்படுகின்றது.

இவை போன்ற காரணங்களால் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள்  ஜனநாயக கடமையான வாக்களிப்பில் கலந்துகொள்ளாமைக்கான காரணங்களாக காணப்படுகின்றன.

3. வாக்களிப்பு குறித்து ஊழியர்களிம் தொடர்ந்து நடைபெற்றுவரும் அசமந்த போக்கு 

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, வாழைச்சேனை, மலையகப்பகுதி, மஸ்கலியா, அட்டன், போன்ற பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக கஷ்டப்பட்டவர்கள் தான் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒரு சொற்ப நபர்களே தேர்தல் காலங்களில் சொந்த ஊருக்கு சென்று தமது வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றுகின்றனர். அதிகமானவர்கள் வாக்களிப்பதற்காக ஊர்களுக்கு செல்வதில்லை. 

இவர்கள் இவ்வாறு செல்லாமல் இருப்பதற்கான காரணம் விடுமுறைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படும் நாட்களின் கால அளவு இவர்களுக்கு போதுமானதாக இல்லை.

ஏனெனில் இங்கு தொழில்புரியும் அனைவரும் தூரப் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள். அத்துடன் அவர்கள் சொந்த ஊர்களுக்கு போய்வருவதற்கான செலவு குறிப்பாக பயணச்செலவு அதிமாகும்.

இதேவேளை, தொழிற்சாலையில் வேலைசெய்யும் போது வருகைக்கான கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் கிடைப்பதால் இவர்கள் விடுமுறை எடுத்து செல்வதில் அக்கறை செலுத்துவதில்லை. அதுவும் இவர்கள் மேலதிகமாக வீடுமுறை எடுத்து போகும் போது இவர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகள் கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளதாலும் வாக்களிக்க செல்வதில் பெரும்பான்மையானோர் அக்கறை காட்டுவதில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தல்கள் காலத்தில் வாக்களிப்பதற்காக ஒருவர் மஸ்கெலியாவுக்கு சென்றிருந்தார்.

காலைநேரம் வேலை முடிந்து இரவு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். வழக்கமாக அவர் மஸ்கெலியாவுக்கு பயணத்திற்கான ஒருவழிப்பதைக்கு ஐந்நூறு ரூபாவையே செலவழிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் காலமானதால் அவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் தான் பயணித்துள்ளார். ஆனால் அவருக்கு 3 மடங்கு பணத்தை செலவழிக்க நேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக அவர் தெரிவிக்கும் காரணம் அற்றைய நாட்களில் மக்கள் தொகையாக இருப்பர் போக்குவரத்துக்கு போதுமான பஸ் மற்றும் புகையிரதங்கள் போதாமை போன்ற பிரச்சினைகளுக்கு முங்கொடுத்ததாக குறிப்பிட்டார்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் அனைவரும் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வமாக காணப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது சொந்த ஊருக்குசென்று வருவதவற்கு இரண்டு நாட்கள் தேவைப்படுவதாக குறிப்பிடுகின்றனார்.

அதேநேரம் அவர் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்கு குறைந்தது 3 நாட்கள் தேவைப்படுவதாகவும் அவ்வாறு தான் ஊருக்கு செல்வதென்றால் நான் பஸ்களில் பிரயாணம் செய்ய வேண்டுமென்றும் மட்டக்களப்பில் இருந்து தனது கிராமத்திற்கு செல்வதற்கு பஸ் வசதி இல்லையெனவும் கூறுகின்றார்.

இவ்வாறு தான் சென்று வருவதால் குறைந்தது 5 நாட்களாவது விடுமுறை தேவைப்படுவதாகவும் இதனால் மேலதிகமாக தான் 2 நாட்களை விடுமுறையாக பெறவேண்டிய நிலையேற்படுவதால் தனக்கு கிடைக்கும் மேலதிக கொடுப்பனவு மற்றும் வருகைக் கொடுப்பனவான 5 ஆயிரம் ரூபா கிடைக்காமல் போவதாகவும் தெரிவித்தார்.

4. தேர்தல்கள் சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள்

ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு சட்டங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், உள்ளுராட்சி மன்னறத் தேர்தல், மக்கள் விருப்பம் கோரல் அல்லது மக்கள் தீர்ப்பு போன்ற தேர்தல்களுக்கு சட்டங்கள் வரையாறுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் சட்டங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில் அனைத்து வகையான தேர்தல்களுக்கும் வரையப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரே விடயதானத்தையே கூறுகின்றன.

பாராளுமன்றத் தேர்தல்

பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால் 1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122 ஆவது பிரிவில்  “ தேர்தல் ஒன்றில் நேரடியாக வாக்களிப்பதற்கு உரித்துடைய எவரேனும் ஒரு நபரின் தொழில் தருநராக இருப்பவரான எவரேனும் ஒரு நபர் அத்தகைய நபரினால் அதற்கென எழுத்து மூலம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மேல் அத்தகைய நபர் நேரடியாக வாக்களிப்பதை இயலச்செய்வதற்கு போதியதென தொழில் தருநராகிய அந்த நபர் கருதக்கூடிய தொடர்ச்சியான அத்தகைய காலத்திற்கு ( அக்காலம் 4 மணித்தியாலத்திற்கு குறையாததாக இருத்தல் வேண்டும் ) எழுத்திலால் சம்பளக் குறைப்பற்ற விடுமுறையை அத்தகைய நபருக்கு வழங்குதல் வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

எவராவது ஒருவர் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வதற்கு அவர் தொழில்புரிபவராக இருந்தால், அவர் தன்னுடைய தொழில் தருநரிடம் ஒரு எழுத்து மூலக் கோரிக்கை விடுத்தால் அவர்கள் சம்பளம் குறைப்பற்ற விசேட விடுமுறை வழங்க வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பதற்கான செல்லும் ஊழியரின் வாக்களிப்பு நிலையம் இருக்கும் தூர அளவுக்கு ஏற்ப தேர்தல்கள் ஆணைக்குழு தொழில் திணைக்களத்துடன் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வந்து ஒரு வரையறையொன்று சுற்றுநிரூபத்தின் ஊடாக விதிக்கப்படும். 

தேர்தல் ஆணைக்குழுவும் தொழில் ஆணையாளர் நாயகமும் இணைந்து வெளியிடும் சுற்றுநிரூபத்தில் அதாவது 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறையும் 50 கிலோ மீற்றருக்கும் 100 கிலோ மீற்றர் தூரத்திற்கும் இடையிலான தூரத்தைக் கொண்டிருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 கிலோ மீற்றருக்கும் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கும் இடைப்பட்ட தூரமாக இருந்தால் 2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேற்பட்டால் 3 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டுமென்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு தேர்தல் இடம்பெறும் காலத்தில் ஒரு சுற்று நிரூபமாக வெளியிடப்படும். தொழில் ஆணையாளரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இதனை அறிவிப்பார்.

ஆனால் சட்டத்தில் காணப்படா விடயம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் விடுமுறை நாட்கள் வரையாறுக்கப்படவில்லை. இந்த விடுமுறைநாட்களை வரையறுக்கும் பொறுப்பை தொழில் வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தான் தேர்தல் ஆணைக்குழுவும் தொழில் ஆணைக்குழுவும் தொழில் ஆணையாளர் நாயகமும் ஒருங்கிணைந்து தூர அளவுக்கு ஏற்ப விடுமுறை நாட்களை வழங்குகின்றனர்.

இந்தமுறை 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது. வேறு சட்டங்களிலும் இதே நடைமுறைதான் காணப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் சட்டம்

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் 120 ஆவது பிரிவிலும் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிட்டதைப்போன்றே காணப்படுகின்றது.

ஆகக் குறைந்த தூரத்திற்கு 4 மணித்தியால விடுமுறை, எழுத்து மூலம் விடுறை கோரப்படவேண்டும். அவ்வாறு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தொழில் தருநனர் தூர அளவிற்கு ஏற்ப விடுமுறை வழங்குவார்.

மாகாணசபை தேர்தல்

அதேபோன்று மாகாணசபை தேர்தலை எடுத்துக்கொண்டால் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தின் 123 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டள்ளது. அதிலும் ஒரே விடயமே குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளை சட்டம்

அதேபோன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளை சட்டத்தில் 84 ஆ பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் விருப்பம் கோரல்

அதேபோன்று மக்கள் விருப்பம் கோரல் அல்லது மக்கள் தீர்ப்பு 1981 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க மக்கள் தீர்ப்புச் சட்டத்தின் 71 ஆம் பிரிவிலும் அதே விடயம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தேர்தல்கள் சட்டங்களிலும் விடுமுறை வழங்கல் குறித்து சொல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, வாக்களிப்பதற்கு செல்வதற்காக விடுமுறை கோரப்பட்டு அது வழங்காவிடப்பட்டால் என்னநடக்கும் என்றும் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்று பார்த்தால், 

விடுமுறை வழங்கப்படாதுவிட்டிருப்பின் அல்லது ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது அந்த  ஏற்பாடுகளுக்கு இணங்கி ஒழுகத் தவறுகின்ற நபர் எவரும் தவரொன்றுக்கு குற்றவாளியாக உட்பட வேண்டுமென்பதுடன் நீதிவான் ஒருவருக்கு முன்னரான சுருக்கமுறை விளக்கத்திற்கு பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் 500 ரூபாவுக்கு மேற்படாத ஒரு குற்றப்பணத்திற்கு அல்லது ஒரு மாதகாலத்திற்கு மேற்படாத கால இருவகையிலான ஒரு வகை சிறைத்தண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மற்றும் சிறைத் தண்டனை ஆகிய இரு தண்டனைக்கும் உட்பட வேண்டும். 

ஆனால் இவ்வாறு தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்வதற்கான விடுமுறைகளை தொழில் தருநரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடாமல் வாய் மூலம் கேட்கும் ஊழியர்களும்  இருக்கிறார்கள். இவ்வாறு கேட்பதால் விடுமுறை வழங்கப்படமாட்டாது. எழுத்து மூலம் கோரிக்கை விடப்பட வேண்டும். அதையே சட்டமும் சொல்லுகின்றது.

5 . சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றி வாக்களிக்க செல்லாது தவிர்க்கும் ஊழியரின் கருத்து

எனக்கு இப்போது 23 வயதாகின்றது. ஆனால் நான் இதுவரையும் வாக்களித்ததில்லை. நான் வசிக்கும் இடம் முல்லைத்தீவு. அம்மா, அப்பாவுடன் எனக்கு 6 சகோதரர்கள் இருக்கின்றனர். நான் வீட்டில் 5 ஆவது பிள்ளை என்கிறார் தவமலர். (பெயர் மாற்றப்பட்டுள்ளது )

நான் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் ஊழியராக பணியாற்றுகின்றேன். எமது தொழிற்சாலையில்  700 பேர் வேலை செய்கின்றோம். எமது தொழிற்சாலையை போன்று வேறு பல தொழிற்சாலைகள் உள்ளன இந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில்.

நான் கட்டுநாயக்கவில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்று வாக்களிப்பதாக இருந்தால் எனக்கு வழங்கப்படும் விடுமுறையே போதாது நான் வாக்களிக்கச் சென்றுவிட்டு மீண்டும் கட்டுநாயக்க வருவதற்கு .எனக்கு வாக்களிப்பதற்காக 2 நாட்கள் தான் விடுமுறை வழங்குவார்கள். நான் அங்கு செல்வதற்கு ஒருநாள் தேவை. மீண்டும் அங்கிருந்து இங்கு வருவதற்கு ஒருநாள் தேவை. ஆனால் எனக்கு 3 நாட்கள் தேவைப்படுகின்றன. 

எனது ஊருக்கு செல்வதற்கு 9 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றது. விடுமுறை வழங்கப்படும் 2 நாட்களிலும் நான் ஊருக்கு சென்று வருவதற்கு விடுமுறை போதாது. 

அவ்வாறு நான் சென்று வருவதென்றால் மேலதிகமாக விடுமுறை எடுக்க வேண்டி வரும். அப்போது எனது விடுமுறை கழிக்கப்படும் என்பதோடு மேலதிக கொடுப்பனவு மற்றும் சம்பளம் கழிக்கப்படும். அந்தவகையில் எமக்கு ஒருநாளைக்கு 3500 ரூபா முதல் 4000 ரூபாவரை கழிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

நிறுவனத்தினர் தான் எமக்கு விடுமுறை வழங்குவார்கள் . இங்கு  நாம் விடுமுறை கோரி எந்த கோரிக்கையையும் முன்வைப்பதில்லை. எமது தரப்பு நியாயங்களை பேசுவதற்கு இங்கு எவரும் இல்லாததால், நாம் மேலதிக விடுமுறை தொடர்பில் எவ்வித கோரிக்கையையும் கேட்பதில்லை. ஆகவே அவர்கள் சொல்வதையே நாங்கள் செய்ய முடியும். 

நாங்கள் ஊருக்கு போறதென்றால் எமக்கு கண்டிப்பாக பணம் தேவை. ஆனால் வாக்களிக்கப் போகும் போது கிடைக்கும் விடுமுறை நாட்களில் எம்போன்ற தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு கிடைக்காது. அதனால் பல ஊழியர்கள் வாக்களிக்கப் போகாது அதனை தட்டிக்கழிக்கின்றனர்.

எனக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கு விரும்பம் . அத்துடன் அது எமது ஜனநாயக உரிமையும் கூட, எனக்கு 3 நாள் விடுமுறை வழங்கினால் நான் வாக்களிக்கச்சென்றுவிட்டு மீண்டும் வேலைக்கு வரமுடியும். இதேபோன்று அநேகமான பிள்ளைகள் இவ்வாறு வாக்களிக்கச் செல்லாது இருக்கின்றனர். 

எமக்கு தேர்தல்கள் காலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான போதிய தெளிவின்மையுள்ளது. அத்துடன் அவ்வாறு வாக்குக் கேட்கும் வேட்பாளர்களால் எவ்வித நன்மையும் எமக்கு கிடைப்பதில்லை. நாங்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சென்று வாக்ளித்தாலும் அவர்கள் ஊழியர்கள் விடயத்தில் எவ்வித கரிசனையையும் காட்டுவதில்லை. இதனால் இவ்வாறானவர்களுக்கு வாக்களித்து எமக்கு என்ன நன்மையென்று நினைத்தும் வாக்களிப்பை தவிர்க்க வேண்டிய கூழல் என்போன்ற பலருக்கு இருக்கின்றது.

இவ்வாறான காரணங்களினாலேயே நாம் வாக்களிக்கச் செல்வதில்லை என்கின்றார் தவமலர்.

6. நடைமுறைகளையும் அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களையும் தெளிவுபடுத்திய தேர்தல்கள் திணைக்களம்

ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் ஊழியர்கள் வாக்களிப்பதற்கான விடுமுறை வழங்குவது தொடர்பில் அனைத்து வகையான தேர்தல்களுக்கும் ஒரு வகையான சட்டமே உள்ளது என  துணை தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, அதேபோன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளை சட்டத்தை எடுத்துக்கொண்டாலும் சரி,  மாகாணசபை தேர்தல் சட்டத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, அதேபோன்று மக்கள் விருப்பம் கோரல் அல்லது மக்கள் தீர்ப்பை எடுத்துக்கொண்டாலும் சரி அங்கு சொல்லப்பட்டுள்ள சட்டங்களில் வாக்களிப்பதற்காக தொழில்புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலம் தொடர்பில் ஒரு வகையான விளக்கமே அனைத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

உதாரணமாக 1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122 ஆவது பிரிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.“ தேர்தல் ஒன்றில் நேரடியாக வாக்களிப்பதற்கு உரித்துடைய எவரேனும் ஒரு நபரின் தொழில் தருநராக இருப்பவரான எவரேனும் ஒரு நபர் அத்தகையா நபரினால் அதற்கென எழுத்து மூலம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மேல் அத்தகைய நபர் நேரடியாக வாக்களிப்பதை இயலச்செயவதற்கு போதியதென தொழில் தருநராகிய அந்த நபர் கருதக் கூடிய தொடர்ச்சியான அத்தகைய காலத்திற்கு ( அக்காலம் 4 மணித்தியாலத்திற்கு குறையாததாக இருத்தல் வேண்டும் ) எழுத்திலால் சம்பளக் குறைப்பற்ற விடுமுறையை அத்தகைய நபருக்கு வழங்குதல் வேண்டும்”

எவராவது ஒருவர் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வதற்கு அவர் தொழில்புரிபவராக இருந்தால், அவர் தன்னுடைய தொழில் தருநரிடம் ஒரு எழுத்து மூலக் கோரிக்கை விடுத்தால் அவர்கள் சம்பளம் குறைப்பற்ற விசேட விடுமுறை வழங்க வேண்டும்.

உதாரணத்திற்கு தொழில்புரியும் இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் வாக்களிப்பு நிலையம் இருந்தால் ஆகக் குறைந்தது 4 மணித்தியாலங்கள் வழங்க வேண்டும். 

அதற்மேல் விடுமுறை வழங்குவது தொடர்பில் தொழில் வழங்குனரே தீர்மானிப்பார் என சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அண்மைக்காலமாக இதுவொரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. தொழில் தருநர்கள் கூறுகின்றனர் தேர்தல்கள் சனிக்கிழமைகளில் இடம்பெறுவதால் நாங்கள் அரைநாள் விடுமுறையை வழங்குகின்றோம் என்கின்றனர்.

ஒரு ஊழியர் மொனராகலை போன்ற பகுதிக்குச் சென்று வாக்களித்துவிட்டு வருவதாக இருந்தால் சிலவேளைகளில் திங்கட்கிழமையும் செல்லும். சனிக்கிழமை தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக குறித்த ஊழியர் வெள்ளிக்கிழமை செல்லவேண்டி இருக்கும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படாது சனிக்கிழமையே அரைநாள் விடுமுறை வழங்கப்படும். 

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு செய்த காரியம் என்னவென்றால், தேர்தலில் வாக்களிப்பதற்காக செல்லும் ஊழியரின் வாக்களிப்பு நிலையம் இருக்கும் தூர அளவுக்கு ஏற்ப தேர்தல்கள் ஆணைக்குழு தொழில் திணைக்களத்துடன் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வந்து, ஒரு வரையறையொன்று சுற்றுநிரூபத்தின் ஊடாக விதிப்பதற்கு முடிவெடுத்து. அது தேர்தல்கள் இடம்பெறும் காலத்தில் அவ்வாறு சுற்று நிருபமும் வெளியிடப்படும்.

தேர்தல் ஆணைக்குழுவும் தொழில் ஆணையாளர் நாயகமும் இணைந்து வெளியிடும் சுற்றுநிரூபத்தில் அதாவது 50 கிலோ மீற்றர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறையும் 50 கிலோ மீற்றருக்கும் 100 கிலோ மீற்றர் தூரத்திற்கும் இடையிலான தூரத்தைக் கொண்டிருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 கிலோ மீற்றருக்கும் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கும் இடைப்பட்ட தூரமாக இருந்தால் 2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேற்பட்டால் 3 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டுமென்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறு தேர்தல் இடம்பெறும் காலத்தில் ஒரு சுற்று நிரூபமாக வெளியிடப்படும். தொழில் ஆணையாளரும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இதனை அறிவிப்பார்.

எனவே சட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும் இல்லையென்று சொல்ல முடியாது. சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.

ஆனால் சட்டத்தில் காணப்படாத விடயம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் விடுமுறை நாட்கள் வரையாறுக்கப்படவில்லை. இந்த விடுமுறைநாட்களை வரையறுக்கும் பொறுப்பை தொழில் வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தான் தேர்தல் ஆணைக்குழுவும் தொழில் ஆணைக்குழுவும் தொழில் ஆணையாளர் நாயகமும் ஒருங்கிணைந்து தூர அளவுக்கு ஏற்ப விடுமுறை நாட்களை வழங்குகின்றனர்.

இந்தமுறை 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், 2020 ஆம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் எல்லம் தூர அளவுகளின் படியே ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை வழங்கப்பட்டது.

ஆகக் குறைந்த தூரத்திற்கு 4 மணித்தியால விடுமுறை, எழுத்து மூலம் விடுறை கோரப்படவேண்டும். அவ்வாறு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தொழில் தருநனர் தூர அளவிற்கு ஏற்ப விடுமுறை வழங்குவார்.

அனைத்து தேர்தல்கள் சட்டங்களிலும் விடுமுறை வழங்கல் குறித்து சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்த விடுமுறை வழங்கும் நடைமுறை அண்மையில் தான் கொண்டுவரப்பட்டிருந்தது. தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறைகள் வழங்கப்படாத நிலையில், தொழில் ஆணையாளருக்கு தான் அனேகமான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. 

இதில் ஒரு பிரச்சினை உள்ளது என்னவென்றால் சுதந்திர வர்த்தக வலயம் என்று சொல்லப்படும் போது அங்கு வர்த்தகர்களுக்கு சுதந்திரம் உள்ளது. இலங்கை சட்டங்களுக்கு அவர்கள் உட்பட மாட்டார்கள். 

ஏனெனில் அவர்களின் இறக்குமதிகளுக்கு வரிகள் குறைவு. அவர்கள் கொண்டுவரும் துணிகளுக்கு வரிகள் குறைவு. ஏனெனில் அவை ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் துணிகள். பின்னர் அவை ஆடைகளாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைவிட பெரும்பாலும் சுதந்திர வர்த்தக வலயத்தில் முதலீடு செய்பவர்கள் வெளிநாட்டவர்களே. 

அதனால் அவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சலுகைகளுடன் இலங்கைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் இல்லையென்று இல்லை. 

ஆனால் தொழில் ஆணையாளர்நாயகம் அனைத்து தொழில் தருநர்களுக்கும் இந்த சட்டநடைமுறைகளை அறிவிப்பார். 

மற்றுமொரு பிரச்சினையென்றவென்றால் வாக்களிப்பதற்கு செல்வதற்காக விடுமுறை கோரப்பட்டு அது வழங்காவிடப்பட்டால் என்னநடக்கும் என்றும் சட்டத்தில் செல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால்,

விடுமுறை வழங்கப்படாதுவிட்டிருப்பின் அல்லது ஏற்பாடுகளை மீறுகின்ற அல்லது அவ் ஏற்பாடுகளுக்கு இணங்கி ஒழுகத் தவறுகின்ற நபர் எவரும் தவரொன்றுக்கு குற்றவாளியாக உட்பட வேண்டுமென்பதுடன் நீதிவான் ஒருவருக்கு முன்னரான சுருக்கமுறை விளக்கத்திற்கு பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் 500 ரூபாவுக்கு மேற்படாத ஒரு குற்றப்பணத்திற்கு அல்லது ஒரு மாதகாலத்திற்கு மேற்படாத கால இருவகையிலான ஒரு வகை சிறைத்தண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மற்றும் சிறைத் தண்டனை ஆகிய இரு தண்டனைக்கும் உட்பட வேண்டும். 

ஆனால் இவ்வாறு தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்வதற்கான விடுமுறைகளை தொழில் தருநரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடாமல் வாய் மூலம் கேட்கும் ஊழியர்களும்  இருக்கிறார்கள். இவ்வாறு கேட்பதால் விடுமுறை வழங்கப்படமாட்டாது. எழுத்து மூலம் கோரிக்கை விடப்பட வேண்டும். அதையே சட்டமும் சொல்லுகின்றது.

குறிப்பாக எழுத்து மூலம் தொழில் தருனரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஏன் என்றால் பின்னர் தமது தொழிலுக்கு ஏதாவது நேர்ந்திடுமோ என எண்ணி அல்லது தொழில் தருநனர் தொழில் வழங்குவதில் இருந்து நீக்கிவிடுவார்களோ என்று ஊழியர்களிடம் அச்சம் காணப்படுகின்றது.

ஆனாலும் ஒருவர் வாக்களிக்கச் செல்வதாக தெரிவித்து ஒரு தொழில் தருநரை ஏமாற்ற நினைத்தால் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன். குறிப்பாக தொழில் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து வழங்கும் விடுமுறைகள் சாதாரணமாக போதுமானது. வாக்களிப்பில் கலந்துகொள்வதற்கு அவ்வாறு அனைவருக்கும் அன்றையதினத்தில் வாக்களிக்க மாத்திரமே விடுமுறை வழங்கப்படுகின்றது. விடுகளுக்கு சென்று விடுமுறையை களிப்பதற்கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் குறித்த நபர் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வதற்கும் வாக்களித்துவிட்ட மீண்டும் திரும்பி வருவதற்கும் மாத்திரமே விடுமுறை வழங்கப்படுமென்று.

இதற்கு தான் தொழில் தருநனர் விடுமுறை வழங்குவரே தவிர வேறு தேவைகளுக்கு அவர் விடுமுறை வழங்க ஒத்துக்கொள்ள மாட்டார்.

வேறு தேவைகளின்  நிமித்தம் விடுமுறை கோரலுக்கு சட்டமும் இடம்கொடுக்காது. சட்டம் அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்குத் தான் உள்ளதே தவிர, ஏனைவற்றை பாதுகாப்பதற்கு அல்ல.

அவ்வாறு அனைவருக்கும் 4 அல்லது 5 நாட்கள் விடுமுறைகளை வழங்கினால் முழு நாடும் ஸ்தம்பித்துவிடுமே . வாக்களிப்பு இடம்பெறுவதே ஒரு நாள் மாத்திரமே அதுவும் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரையுமே. 

அடுத்தது சம்பளம் குறைப்பற்ற விசேட விடுமறையைத்தான் தொழில் தருனர் வாக்களிப்புக்காக ஊழியர்களுக்கு வழங்குகின்றார். அவ்வாறு தேவையென்றால் ஊழியர்களுக்கு தொழில்தருநரால் வழங்கப்படும் சாதாரண விடுமுறைக்கு மேலதிக விடுமுறை தேவையென்றால் ஊழியர்களின் விடுமுறையில் எடுத்துச் செல்ல முடியும். 

நியாயமான விடுமுறை நாட்களையே தேர்தல் ஆணைக்குழுவும் தொழில் ஆணைக்குழுவும் தொழில் ஆணையாளர் நாயகமும் இணைந்து எடுத்து வெளியிடும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. முடிவுரை

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் வாக்களிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காணப்படுவதாலும் அவர்கள் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிப்பதற்கான விடுமுறை வழங்கல் குறித்து சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள விடுமுறையின் கால அளவு போதாமையால் அவர்கள் வாக்களிப்பை தவிர்க்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதை இந்த ஆய்வுக் கட்டுரை மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் மற்றும் அவர்கள் அந்த விடுமுறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் இந்த ஆய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

ஆனாலும் இதனை நடைமுறைப்படுத்தும் போது நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதை இந்த ஆய்வின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

இவ்வாறன நடைமுறைச் சிக்கல்களை எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்வதற்கு இந்த பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத்தியதன் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரையாளர் சில யோசனைகளை முன்வைக்கிறார்.

அதன்படி தேர்தல்கள் இடம்பெறும் போது தபால்மூல வாக்களிப்பு ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளது. அதேபோன்று தனியார் துறை ஊழியர்களுக்கும் தபால் மூல வாக்களிப்பு நடைமுறையை உரிய தரப்பினர் அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு வாக்களிப்புக்காக தூர பிரதேசங்களுக்கு சென்று வாக்களிப்பு என்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் தொழில் செய்யும் நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொணடுக்க வேண்டும்.

அரசாங்கமோ அல்லது தேர்தல் திணைக்களமோ அல்லது தொழில் திணைக்களமோ இவ்வாறு வாக்களிக்க செல்லாது தவிர்க்கும் ஊழியர்கள் தொழில்புரியும் தொழிற்சாலைகளில் விசேட கணிப்பீடுகளை மேற்கொண்டு ஒவ்வொருவரும் எங்கு சென்று வாக்களிக்கின்றார்கள் என்று ஆராய்து அவர்களுக்கு ஒரு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுக்க  நடவடிக்கை எடுக்க முடியும்.

தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்வதற்கான விடுமுறை தொடர்பான சட்டத்தில் ஒரு திருத்த்தை கொண்டு வருதல் குறிப்பாக விடுமுறைநாட்களை அதிகரித்தல் போன்ற செயற்பாடுகளில் உரியதரப்பினர் அக்கறை காட்ட முடியும்.

இதேவேளை, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான போதிய அறிவின்மை தூர பிரதேசங்களில் தொழில்புரியும் ஊழியர்களிடம் காணப்படுகின்றது. அத்துடன் அவ்வாறு வாக்குக் கேட்கும் வேட்பாளர்களால் எவ்வித நன்மையும் கிடைக்காமை. வாக்ளித்தாலும் ஊழியர்கள் விடயத்தில் எவ்வித கரிசனையும் காட்டப்படாமையால் வாக்களிப்பை ஊழியர்கள் தவிர்ப்பதால் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் இவ்வாறான ஊழியர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. உசாத்துணை / தகவல் மூலங்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளை சட்டத்தில் 84 ஆ பிரிவு

http://www.lgpc.gov.lk/

https://elections.gov.lk/

1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 122 ஆவது பிரிவு  

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் 120 ஆவது பிரிவு

http://documents.gov.lk/en/gazette.php

http://documents.gov.lk/

http://www.paffrel.com/

வீ.தனபாலசிங்கம் முன்னாள் தினக்குரல் ஆசிரியர் கொழும்பு

https://www.tni.org/en/article/the-conditions-of-the-workers-in-the-free-trade-zones

சிரமாபிமானி கேந்தரய அதிகாரி ரொசானி கட்டுநாயக்கா

Centre for Monitoring Election Violence (CMEV)

ஆய்வாளர் வீ .பிரியதர்சன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்