பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) பாராளுமன்ற பிலியட் அறையில் நடைபெற்றது.

ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. டாம் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன வெற்றிபெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் கயஷான் நவனந்த சதுரங்கம் (ச்செஸ்), கரம் மற்றும் ஸ்னூக்கர் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றார்.

மேசைப்பந்துப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வெற்றிபெற்றார். பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சதுரங்கம் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். கரம் விளையாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு இரண்டாவது இடம் கிடைத்ததுடன், மேசைப் பந்துப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் கயஷான் நவனந்தவுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இரண்டாவது வருடமாக இம்முறை நடத்தப்பட்டது. ஏ.உபாலி பிரேமச்சந்திர, கே.பி.நந்ததேவ, எச்.ஜி.அனுஸ்க மதுரங்க ஆகிய பாராளுமன்ற பணியாளர்கள் போட்களின் நடுவர்களாகப் பணியாற்றியிருந்தனர்.

இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்டன் பெர்னாந்து, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசநாயக, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.