(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மாகாண சபை தேர்தலை தொடர்ந்து தனித்து செல்ல தீர்மானித்துள்ளதால் பொதுஜன பெரமுனவும் தனித்து போட்டியிட கவனம் செலுத்தியுள்ளதாக  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளை புறக்கணிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

கூட்டணியில் உள்ள பங்காளி கட்சியின் உறுப்பினர்களையும்,தலைவர்களையும் விமர்சிக்கும் செயற்பாடுகளில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஈடுப்படுகிறார்கள்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிரானதாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் காரணமாக மக்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள்.உயர்மட்ட தீர்மானங்கள் அரசாங்கத்திற்குள் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள்  மாகாண சபை தேர்தலை தொடர்ந்து தனித்து செல்ல தீர்மானித்துள்ளதால் பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட தலைவர்கள் மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்கள்.மாகாண சபை தேர்தலில் காலத்தில் அரசியல் ரீதியில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய சேதன பசளை திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

சிவில் நிர்வாக சேவையில் இராணுவத்தினரை ஈடுப்படுத்தும் போது அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் அதன் விளைவை தற்போது அனைவரும் எதிர்க் கொள்கிறோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்கள் சிறந்ததாக காணப்பட்டது.நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் முழு அரச நிர்வாகத்தையும் பலவீனப்படுத்தியது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து விரிவுப்படுத்தப்பட்ட கூட்டணியை உருவாக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.