சில வருடங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சிவி' என்ற ஹாரர் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் மறைந்த குணச்சித்திர நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி சரண்ராஜ் மற்றும் தேஜா சரண்ராஜ் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.

இயக்குநர் கே. ஆர். செந்தில்நாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைபடம் 'சிவி 2'. இந்தப்படத்தில் யோகி சரண்ராஜ், தேஜா சரண்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் நடிகை சுவாதிஷா,  நடிகர்கள் சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், குமரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. எல். சஞ்சய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு, எஃப் .எஸ் . ஃபைஜில் இசை அமைத்திருக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

'' சிவி படத்தின் முதல் பாகத்தில் நாயகனின் கழுத்தில் பேய் ஒன்று உட்கார்ந்து எதிரிகளை பழிவாங்கும். இரண்டாவது பாகத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வைத்தியசாலை ஒன்றுக்கு விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆய்வு செய்ய செல்கிறார்கள். 

அங்கு அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்யமான  சம்பவங்களை விறுவிறுப்பாக ஹாரர் திரில்லர் ஜேனரில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம்.

இந்தப் படத்தில் மறைந்த குணச்சித்திர நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி சரண்ராஜ் அவரது வாரிசான தேஜா சரண்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். '' என்றார்.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலிதா கஸ்தூரி கண்ணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் ‘சிவி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.