லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று மாலை நடைபெற்ற கொழும்பு ஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Image

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டி இன்று பிற்பகல் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தனஞ்சய டிசில்வா தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை ஜெய்ன்ட் ஆகிய அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், நஜிபுல்லா 40 பந்துகளில் 54 ஓட்டங்களையும், தசூன் சானக்க 38 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் கொழும்பு ஸ்டார் சார்பில் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளையும், கீமோ போல், அகில தனஞ்சய மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 196 என்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

அணி சார்பில் அதிகபடியாக தினேஷ் சந்திமால் 26 ஓட்டங்களை குவித்தார்.

பந்து வீச்சில் தம்புள்ளை ஜெய்ன்ட் சார்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், சமிக கருணாரத்ன, தரிந்து ரத்நாயக்க மற்றும் இம்ரான் தாகீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.