இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா

By T. Saranya

08 Dec, 2021 | 12:31 PM
image

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரலாற்று சிறப்புமிக்க வகையில் தனது முதலாவது பொறியியல் பட்டப்படிப்பு விருதுகள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியுள்ளது.

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வரலாற்று சிறப்பு மிக்க வகையில், 106 பட்டதாரிகளைக் கொண்ட முதல் அணிக்கு விஞ்ஞானமாணி இளங்கலை சிறப்புப் பட்டம் வழங்கி, பட்டமளிப்பு விழாவை சிறப்பாக நிறைவு செய்துள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்டமளிப்பு விழா தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் பட்டதாரிகளின் குடும்பங்கள் மற்றும் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் போதனாசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

கௌரவ அதிதியாக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வேந்தரும் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினருமான வித்யா ஜோதி பேராசிரியர் கே.கே.வை.டபிள்யூ. பெரேரா கலந்து கொண்டதுடன் சிறப்புரையை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் அதிவிசேட மற்றும் முழுமையான அதிகாரம் கொண்ட தூதுவரான மாண்புமிகு திரு. டெனிஸ் சாய்பி  ஆற்றினார்.

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல்வரும், துணை வேந்தருமான பொறியியலாளர் ரஞ்சித் ஜி. ரூபசிங்க தனது வரவேற்பு உரையில், 

“எங்கள் முதல் தொகுதி பட்டதாரிகள் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். எமது பல்கலைக்கழகத்தால் எத்தகையை பட்டத்தையும், தகமையையும் வழங்க முடியும் என்பதற்கு போதிய ஆதாரம் எதுவுமின்றி எமது பல்கலைக்கழகத்தில் இணைந்து தமது கல்வியை முன்னெடுக்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. இன்று அவர்களின் தைரியத்திற்கான சான்றை நம்மால் கண்கூடாகக் கண்டு கொள்ள முடிந்துள்ளது. அவர்கள், எங்கள் போதனாசிரியர்களுடன் சேர்ந்து, புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கல்வி நிறுவனம் என்ற வகையில் நாங்கள் முகங்கொடுத்த பல இன்னல்களை எதிர்த்துப் போராடிய கணங்களில், ஒரு பல்கலைக்கழகம் கொண்டிருக்க வேண்டிய ஒரு சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கினர். அந்த அற்புதமான அணியின் ஒரு அங்கமாக இருந்தமைக்காக எங்கள் பட்டதாரிகள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நாம் ஒன்றிணைந்து ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கியதையும் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஸ்தாபக அத்தியாயத்தையும் கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டார். 

2014 ஆம் ஆண்டில், மாணவர்களின் கனவுகளை உள்ளடக்கிய ஒரு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்து, தொழிற்துறையின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் போக்குகளுக்கு ஏற்ற வகையில், தரமான பட்டதாரிகளை தோற்றுவிப்பதற்கான நோக்குடன் மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் கற்றலில் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் எண்ணத்துடன் இது தொடர்பான முயற்சிகளும், எண்ணக்கருவும் கால்கோள் ஆகின. இந்த நோக்கத்திற்காக, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக முதல்வரும், துணைவேந்தருமான பொறியியலாளர் ரஞ்சித் ஜி. ரூபசிங்க  தொலைநோக்குடனான இலக்கின் அடிப்படையில் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உதயமாகியது. 

சிறப்புரையாற்றிய மாண்புமிகு திரு. டெனிஸ் சாய்பி  வெற்றிகரமாக தமது கற்கையைப் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் அணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, காலநிலை மாற்றம், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்த இளம் பொறியியலாளர்கள் இந்த நாட்டிற்காக ஆற்றக்கூடிய பங்களிப்புகளைப் பற்றி பேசினார். “காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க ஆற்றல் மிக்க பொறியாளர்கள் எங்களுக்குத் தேவை, இயற்கை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் கட்டிடங்களை வடிவமைக்க குடிசார் பொறியியலாளர்கள் எமக்குத் தேவை, மற்றும் வேகமான இணைய அணுகலை மேம்படுத்த டிஜிட்டல் நிபுணர்கள் தேவை," என்று அவர் கூறினார். “வாழ்க்கையை மேம்படுத்துவதில் நீங்கள் எவ்வளவுக்கு பங்களிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்?," என அவர் வலியுறுத்தினார்.

இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ENACT கூட்டாளர்களுள் ஒன்றாகும். இது இலங்கையில் பல்கலைக்கழக கல்வியின் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்திட்டமாகும். இது நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால நவீனமயமாக்கல் முயற்சிகள் மற்றும் உயர் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி சாரா ஊழியர்களின் திறனை கட்டியெழுப்புவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. நுNயுஊவு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ErsamuS Programme திட்டத்தின் ஆதரவுடன் நிதியுதவியளிக்கப்படுகின்ற ஒரு செயற்திட்டமாகும்.

முதல் தொகுதியில் நாடு முழுவதிலுமிருந்து 110 திடசங்கல்பம் கொண்ட மற்றும் அபிலாஷை இலக்கினைக் கொண்ட இளைஞர், யுவதிகள் அடங்கியுள்ளனர். இலங்கையில் வர்த்தக நிறுவனத்தின் பக்கபலத்துடன் இயங்கும் ஒரேயொரு, ஆராய்ச்சி அடிப்படையிலான, விடுதி வசதிகளைக் கொண்ட பல்கலைக்கழகமாக, மாணவர்கள் வளாகத்திற்குள்ளேயே வாழ்ந்து, உயர் கல்லூரி வாழ்க்கையின் பல்வேறு சிறப்பான அனுபவங்களை அனுபவிக்கிறார்கள். இதில் நட்புகளை உருவாக்குவதுடன், மற்றும் ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் கலாச்சார மற்றும் அறிவார்ந்த வளங்களை அனுபவித்து வருகின்றனர். பாதுக்கவில் உள்ள முன்னாள் ஸ்ரீலங்கா டெலிகொம் செயற்கைக்கோள் புவி நிலையத்தில் 37 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட அழகிய சூழலில் இது அமையப்பெற்றுள்ளது.

தற்போது 3000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு தெற்காசிய கூட்டாண்மை உச்சி மாநாடு மற்றும் வணிகச் சிறப்பு விருதுகள் 2019 நிகழ்வில் ‘இந்த ஆண்டின் மிகவும் வளர்ந்து வரும் கல்வி நிறுவனம்’ என்ற விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில், தேசிய வர்த்தக சம்மேளனத்தால் வழங்கப்பட்ட தேசிய வணிக சிறப்பு விருது நிகழ்வில் கல்விச் சேவை மையத்திற்கான சிறப்பு விருது அங்கீகாரத்தையும் இப்பல்கலைக்கழகம் வென்றுள்ளது. இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது தர முகாமைத்துவ முறைமைக்காக ஐளுழு:9001:2008  சான்று அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right