(க.கமலநாதன்)

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் வடக்கு முதல்வருக்கும் எந்தவித இரத்த உறவும் இல்லை. அவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்துக்கொண்டதாலேயே இந்த பந்தம் ஏற்பட்டது.

எனவே அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிரான கூட்டுச் சதிகளை முன்னெடுப்பதாக கூறுவதை தாம் முற்றிலும் மறுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனும் கூட்டு சதிகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததையடுத்தே அவர் இதனை மறுப்பதாக கேசரிக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் எழுக தமிழ் எதிர்ப்பு பேரணி அரச வழங்களை பயன்படுத்த அரச பொறிமுறையின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்பட்டது. அது தொடர்பில் தற்போது நாம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவது போன்று வடக்கில் இடம்பெற்று வரும் சகல இனவாத செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம்.

அதன் காரணமாக வடக்கில் சிலரை இனவாதிகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டிய எம்மை தெற்கின் இனவாதிகளாக அடையாளப்படுத்துகின்றனர். அதேநேரம் தற்போது நல்லாட்சி  அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட்டு எதிரணியில் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் வடக்கு முதலவர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கிடையில் இருக்கும் உறவு முறைய சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சேறு பூசும் முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு சேறு பூசுவது புதிய செயற்பாடல்ல ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இந்தச் செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது எம்மீது சேறு பூசும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனால் எம்மை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு அவர் மூக்குடைத்துக்கொண்டுள்ளார் என்பதே எமது நிலைப்பாடாகும். காரணம் குறித்த ஊடகச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார எனது பெயர் மற்றும் வடக்கு முதல்வர், பாராளுமன்ற உறுப்பினல் விமல் வீரவன்ச பெயர் ஆகியவற்றிலுள்ள முதல் எழுத்துக்களை கொண்டு கணித சூத்திரம் ஒன்றிணை உருவாக்கி அதற்கான விடையாக பூச்சியத்தை கணித்திருந்தார். காரணம் இவர்கள் சகலரும் இனவாதிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் இதற்காக பயன்படுத்திக்கொண்ட கணித சூத்திரம் எந்த அளவுக்கு பொறுத்தமானது என்று பார்க்கின்றபோது அவரின் கணித அறிவு சூனியம்  எனத் தெரியவருகின்றது. எனவே அவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அதேவேளை அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து அவரின் மட்டத்திற்கு இறங்கிச் செயற்பட நான் தயாரில்லை என்பதால் இது தொடர்பில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தொடர்பில் முன்வைக்கபடும் குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது. அவருக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்கினேஸ்ரனுக்கும் இடையில் உள்ள உறவு முறையை பயன்படுத்திக்கொண்டு நாம் சதித் திட்டங்களை தீட்டவில்லை. அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவவின் மகன் வடக்கு முதல்வரின் மகளை மணம் முடித்திருந்தாலும் இலங்கை  அரசியல் வாசுதேவவின் மகனின் நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் ஒன்றுக்கொன்று வேறுபட்டத்தல்ல இரண்டும் ஒன்றாகவே உள்ளது. எனவே சேறு பூசும் விடயங்களில் உறவு முறை அடிப்படையிலான காரணங்களை முன்னிலைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.