இலங்கையில் இப்போது நேரடி சந்தைப்படுத்தல் (Direct Sales Marketing) தொடர்பாகவும் வலையமைப்பு சந்தைப்படுத்தல் (Network Marketing) தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை தோற்றுவித்துள்ளது.

இவ்வாறான நேரடி சந்தைப்படுத்தல் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உண்மையானவையா? இவற்றை நம்பி இத்துறையில் ஈடுபடலாமா? என இத்துறையில் காலடி எடுத்து வைக்க நினைக்கின்றவர்கள் சிந்திக்கின்ற அதேவேளை, இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோமா என்ற சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இவ்வாறான நேரடி சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இந்தியாவிலும் உள்ளன. இவ்வாறான நிலைமைகள் அங்கும் ஏற்பட்டன.

நேரடி விற்பனை சந்தைப்படுத்தலை பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வரன்முறைக்கு உட்பட்டதாக இல்லை. இது இந்த நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் ஒரு சவாலாக உளளதுடன் இந்த நிறுவனங்கள் நிதி மோசடி மற்றும் பண சுழற்சி ஆய்விற்கு உட்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த நேரடி சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அரசின் எந்த வரம்புகளுக்குள்ளும் வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்ளும் இல்லை. தவிர வாடிக்கையாளர்களுக்கு எழும் குறைகளைச் சரி செய்ய மேல்முறையீட்டு வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கிறது. இந்த சிக்கல்களைப் போக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கெனவே இந்த நிறுவனங்களுக்கு இந்திய சட்டத்தின்படி வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது மாநில அரசுகளுடன் இணைந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏற்கெனவே நேரடி சந்தையில் சில்லறை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் இலத்திரனியல் வர்த்தகத்திலும் ஈடுபடுகின்றன. இதனால் இவற்றை ஒழுங்குமுறைப்படுத்த இந்த வழிகாட்டுதல் உதவும்.

இந்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சு இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுரைகளை அனுப்பியுள்ளது. வளர்முக நாடுகளில் இவ்வாறான நிலைமைகள் சட்டபூர்வம் ஆக்கப்பட்டுள்ளதனால் அதனூடாக மக்கள் பெருவாரியான அனுகூலங்களை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக அண்மையில் பேசிய இந்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சின் செயலாளர் ஹேம் பாண்டே, நேரடி சந்தைப்படுத்தல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறையினரோடு ஆலோசித்து இதற்கான முடிவு எட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தத் துறையை மேம்படுத்தவும் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு இது குறித்து கவனம் செலுத்தி இலங்கையில் நேர்மையாக இயங்கும் இவ்வாறான நிறுவனங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தால் போலி நிறுவனங்களிடமிருந்து மக்களை பாதுபாப்பது மட்டுமல்ல மக்கள் மனதில் இத்துறை தொடர்பாக நம்பிக்கையையும் ஏற்படுத்தலாம் அல்லவா?