'கிராண்மா' முன்னோட்டம் வெளியீடு

By Gayathri

07 Dec, 2021 | 07:19 PM
image

நடிகை சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிராண்மா படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஷிஜின் லால் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'கிராண்மா'. இதில் சோனியா அகர்வால் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பொலிவுட் நடிகை விமலா ராமன், மலையாள நடிகர் ஹேமந்த் மேனன், ஷர்மிளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜி.எம்.ஏ பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஆர்.ஜெயராஜ், விநாயகா சுனில் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

'வழக்கமான ஹாரர் படம் போல் கிராண்மா இருக்காது. படத்தின் முதல் பகுதி ஹாரராகவும், இரண்டாவது பகுதி சர்வைவல் மாதிரியும் இருக்கும். 

ஹொலிவுட்டில் கதையை மட்டும் தான் சொல்வார்கள். இடையிடையே கொமடி, காதல், சண்டை போன்ற வணிக விடயங்களை இணைக்க மாட்டார்கள். அந்த வகையில்தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. 

இதில் சோனியா அகர்வால் ஆசிரியையாக நடித்திருக்கிறார். பௌர்ணமி ராஜ் என்ற குழந்தை நட்சத்திரத்தை இந்த படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.  

கொரோனா காலகட்ட நெருக்கடியின்போது படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதால் படத்தை திட்டமிட்டபடி  நிறைவு செய்ய முடிந்தது' என்றார்.

இந்த நிகழ்வில் பங்குபற்றி படத்தின் முன்னோட்டத்தை வாழ்த்தி இயக்குநர் சுப்பிரமணிய சிவா  பேசுகையில், 

''வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால் சாமியை நம்பு. சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் பேயை நம்பு' என சுந்தர் சி ஒரு முறை என்னிடம் கூறியதை இந்த படக்குழுவிற்கு வாழ்த்தாக தெரிவிக்கிறேன். நீங்கள் பேயை நம்பி இருப்பதால் இந்த படம் உங்களை காப்பாற்றும்'' என வாழ்த்தினார்.

தமிழ் திரை உலகை மட்டுமல்லாமல் உலகளாவிய சினிமாவைக் காப்பாற்றி உயிர்ப்புடன் வைத்திருக்கும் பேயை மையப்படுத்தி, 'கிராண்மா' உருவாகி இருப்பதால் இந்தத் திரைப்படம் வெற்றி பெறும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right