இந்தியா சென்ற பசில் ஏன் மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசவில்லை ? - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

Published By: Digital Desk 3

07 Dec, 2021 | 07:18 PM
image

(நா.தனுஜா)

வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள், எமது நாட்டிற்குச் சொந்தமான வளத்தைக் கொள்ளையடித்துச்செல்கின்றனர்.

இருப்பினும் இப்பிரச்சினைக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுத்து உள்நாட்டு மீனவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் மீன்வளம் அருகிச்செல்வதென்பது ஒட்டுமொத்த நாட்டினதும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்படையினர் வசமுள்ள டோரா படகுகள் உள்ளிட்ட நவீன இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி இருவாரகாலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களின் படகுகளைக் கையகப்படுத்துவதுடன் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதன் ஊடாகவே அப்பகுதிலுள்ள கடல்வளங்களைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (7) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு, செலவுத்திட்ட நிதியொதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அண்மைக்காலங்களில் நாட்டின் மீன்பிடித்துறை பாரிய வீழ்ச்சிகண்டிருப்பதுடன் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ளது. 

அதன்விளைவாக தற்போது விவசாயிகளுக்கு நேர்ந்திருக்கும் நிலையே மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களது பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணமாக பெருமளவான மீனவர்கள் தமது தொழிலிலிருந்து விலகி, பிற தொழில்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 

வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் அந்நிய நாட்டு மீனவர்கள், எமது நாட்டிற்குரிய மீன்வளத்தைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

எமது மீனவர்களைத் தாக்குகின்றனர். அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துகின்றனர். ஆனால் இப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுத்து, எமது மீனவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், அங்கு இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த ஆராயப்பட்டது. எமது நாட்டுக்கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைச் சுடுவதற்கான உத்தரவு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டது. 

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் மத்தியில் அந்த உத்தரவு அச்சத்தைத் தோற்றுவித்தது. அதுமாத்திரமன்றி இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீனவர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களது படகுகளைக் கைப்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் வெறுமனே 11 படகுகள் மாத்திரமே கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. வடக்கு கடற்பிராந்தியத்திலுள்ள மீன் உள்ளிட்ட கடல்சார் வளங்கள் அழிவடைவதென்பது ஒட்டுமொத்த நாட்டினது மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். 

தற்போது நாட்டில் யுத்தம் இல்லை. எனவே கடற்படையினர்வசமுள்ள டோரா படகுகள் உள்ளிட்ட நவீன இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி இருவாரகாலத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாண கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்து, அவர்களின் படகுகளைக் கையகப்படுத்துவதுடன் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதன் ஊடாகவே வடக்கு, கிழக்குக் கடற்பிராந்தியத்தில் காணப்படும் வளங்களைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

அடுத்ததாக சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னர் கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் மீன்கள், கடற்பாறைகள், பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் உள்ளடங்கலாக கடல்வளங்கள் அழிவடைந்ததுடன் கடற்சூழல் வெகுவாக மாசடைந்தது. 

அதுமாத்திரமன்றி மீனவர்களின் வாழ்வாதாரம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதாக அரசாங்கம் கூறியபோதிலும் தற்போதுவரை அது அனைவருக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை. 

மேலும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து இழப்பீடாகப் பெறப்பட்ட பெருந்தொகையான நிதிக்கு என்ன நேர்ந்தது? அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களை உரியவாறு சென்றடையாததன் காரணம் என்ன? என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

அதேவேளை மீன்வளம் என்பது எமது நாட்டிற்கு உரித்தான தனித்துவமான வளமாகக் காணப்படுவதுடன் மீன்பிடித்துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. 

அவ்வாறிருக்கையில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை இல்லாமல்செய்து, மீனவர்களையும் நுகர்வோரையும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34