கடன் சுமை கொண்ட இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் - ரணில் விக்கிரமசிங்க

By T. Saranya

07 Dec, 2021 | 10:46 AM
image

(எம்.மனோசித்ரா)

உலகளாவிய ரீதியிலும் தேசிய அளவிலும் தொற்றுநோயைக் குறைப்பதற்கான பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு ஐ.நா பொதுச் சபை கொவிட்-19 தொடர்பில் தொடர்ந்தும் அவதானம்  செலுத்த வேண்டும். அதிக கடன் சுமை கொண்ட இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்றும் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

மாலைத்தீவில் இடம்பெற்ற 4 ஆவது மாநாட்டின் பின்னர் இந்து சமுத்திரத்தில் முன்னர் இல்லாதவாறு பாரிய புரட்சி இடம்பெற்று வருகிறது. சூழலியல், பொருளாதாரம் மற்றும் கொவிட்-19 வைரஸ் தொற்று இயக்கவியல் மற்றும் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், இந்து சமுத்திரம் புதிய சர்வதேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. 

இதன் விளைவாக பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு நீண்டகால தாக்கம் ஏற்பட்டு, பிராந்திய பொருளாதாரங்கள் அடிப்படை கட்டமைப்பும் மாற்றங்களுக்கு உட்படும்.

காலநிலை மாற்றம் முன்னறிவிப்பை விட வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் பத்து ஆண்டுகளில் புவி வெப்பமடைதல் 1.5 செல்சியஸை விட அதிகரிக்கும். உலகிலேயே மிக வேகமாக வெப்பமடையக் கூடியது இந்து சமுத்திரமாகும். 10 முக்கிய நதிகளுக்கு ஊக்கமளிக்கும் இமயமலை சரிதலானது பேரழிவால் மோசமாகப் பாதிக்கப்படும் துணைப் பிராந்தியமாக இருக்கும்.

கடல் மட்டம் உயர்வடைவதால் தென் ஆசியாவில் பல கடற்கரைப் பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடும். மாலைத்தீவு எதிர்கொண்டுள்ள துரதிஷ்டவசமான நிலைமை அனைவரும் அறிந்த காரணியாகும். 

ஆனால் ஆசியாவில் சீனா, இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் என்பவற்றுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும் அவர்களின் இலக்கினை அடைவதற்கு 2050 ஆம் ஆண்டையும் தாண்ட வேண்டியேற்படும்.

பிராந்திய பொருளாதார வளர்ச்சி இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பங்களாதேஷ் என்பவற்றினால் இயக்கப்படுகிறது. பொருளாதாரமும் சூழலியலும் ஒன்று சேரும் ஒரு சந்தியில் நாம் இருக்கிறோம். இந்த நாடுகளுக்கு நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நிலக்கரி தேவை. ஆனால் 2050 க்கு அப்பால் நிலக்கரியை பயன்படுத்துவது புவி வெப்பமடைதலை அதிகப்படுத்தும்.

கிளாஸ்கோ கோப் 26 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டின்  புரட்சிகர நிகழ்ச்சி நிரலில் 'படிப்படியாக வெளியேற்றுவது மற்றும் முறையாகக் குறைத்துக் கொள்வது' தொடர்பான நீண்ட கலந்துரையாடல்கள் பிராந்தியத்தின் நெருக்கடியை மேலும் எடுத்துக்காட்டுகிறன. பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தேசிய உற்பத்திக்கிடையிலான இடைவெளி 3 - 12 வீதம் வரை காணப்படுகிறது.

சூழலியல் மற்றும் பொருளாதாரத்தில் இந்த சவால்கள் கொவிட்19 தொற்றுநோயால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்தது. இது 2019 இல் இடம்பெற்ற இறுதி உச்சி மாநாட்டில் நினைத்தும் பார்க்காதவொரு விடயமாகும். இந்த பொருளாதார சவால்களைத் தவிர பருவநிலை மாற்றத்தால் ஆசியாவிற்கு ஏற்படும் இழப்பு மேற்கத்திய நாடுகளை விட 5-6 மடங்கு அதிகமாகும்.

சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக மனித இடப்பெயர்ச்சி, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் உள்ள பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதும் புதிய மனிதக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதும் பாரிய சுமையாக இருக்கும். 

தொற்று நோய் செலவுகளால் ஏற்கனவே மந்த நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தில் மற்றொரு தாக்கமும் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மந்தநிலையானது, நமது நாடுகளில் சிலவற்றில் பொது சுகாதாரப் பற்றாக்குறை, தொழிநுட்ப சமத்துவமின்மை, கல்விச் சமத்துவமின்மை, வேலையின்மை மற்றும் சமூகச் சிதைவு ஆகியவற்றின் மீதான கவனத்தை குறைக்கும் அபாயமும் காணப்படுகிறது.

கொவிட்-19 க்குப் பிறகு உலகப் பொருளாதார எழுச்சி வளர்ந்த நாடுகளால் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி வழங்கப்படும் கால அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படும். வளர்ந்த பொருளாதாரங்கள் தடுப்பூசி சந்தையை கைப்பற்றி தடுப்பூசிகளை சேமித்து வைப்பதன் மூலம் கொவெக்ஸ் தடுப்பூசி செயற்திட்டத்தை சீர்குழைத்துள்ளன.

உள்நாட்டு தேவைக்கு இந்திய உற்பத்தி தேவைப்படுகிறது. சில நாடுகள் இதுவரையிலும் தமது நாட்டு சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கூட தடுப்பூசியை வழங்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் தோற்றத்திற்கு வழிவகுத்தன. இது இப்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதற்கமைய இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் மற்றும் பணவியல் கொள்கை உதவி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறுகிய கால உற்பத்தி இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

இதனால், நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சாதகமாக இல்லை. நாம் தற்போது தாமதம் இன்றி முன்னோக்கிச் செல்ல வேண்டும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை அடைவதற்கு நமது பிராந்திய பொருளாதாரங்களுக்கு இடையே உள்ள நிரப்புத்தன்மையின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியம் என்பது உலகின் பொருளாதாரத்தில் உயர் பிராந்தியமாகும்.

பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு கட்டமைப்புகளுக்கு பல கட்டங்கள் தேவைப்படுகிறது. இது தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். தென் மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் துணை பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆப்பிரிக்க வர்த்தக உடன்படிக்கை உள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியா இரண்டாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கும், அதற்கு அடுத்தபடியாக பங்களாதேஷூம் பாகிஸ்தானும் காணப்படும்.

இந்த துணை பிராந்தியத்தை உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல், அர்த்தமுள்ள பொருளாதார ஒத்துழைப்பை கொண்டிருக்க முடியாது. அத்தகைய வர்த்தக ஒப்பந்தம் கடினமாக இருக்கக்கூடாது. பொருளாதார ஒத்துழைப்பு, காலநிலை செயல்பாடு, புவிசார் அரசியல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தொற்று நோய் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள ஒரு பிராந்திய நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதற்கு பிராந்திய கட்டமைப்பை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.

உலகளாவிய ரீதியிலும் தேசிய அளவிலும் தொற்றுநோயைக் குறைப்பதற்கான பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு ஐ.நா பொதுச் சபை கொவிட்-19 தொடர்பில் தொடர்ந்தும் விவாதிக்க வேண்டும். அதிக கடன் சுமை கொண்ட பிராந்திய நாடுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். 

காலநிலை மாற்றத்திற்காக ஒரு டிரில்லியன் காலநிலை நிதியத்தை நிறுவுதல். இராணுவமயமாக்கலைத் தடுப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பிராந்திய நிகழ்ச்சி நிரல் போதுமானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right