(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியினருக்கு சபையில் பிரச்சினைகள் இருப்பதற்காக எமக்கான வாய்ப்பையும் தட்டிப்பறிப்பது நியாயமில்லை. எனவே வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை சபையில் பேச எமக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியது.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு , நகர அபிவிருத்தி கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு,தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு ,கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ் நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு,விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தை நடத்துவதில் எதிர்க்கட்சியினரால் தடை ஏற்படுத்தப்பட்டதை அடுத்து விவாதமின்றி அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறைவேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விவாதத்தில் உரையாற்ற தயாராகவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் விவாதங்களும் நிறுத்தப்பட்டதால் சபையில் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர். சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், "இன்று வீடமைப்பு அமைச்சின் கீழான விவாதங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் வீடமைப்பு தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன. 

அந்த நெருக்கடி நிலைமைகள், சிக்கல்கள் குறித்து உரையாற்றவே நாம் இன்று சபைக்கு வந்தோம். பிரதான எதிர்க்கட்சியினருக்கு சபையில் பிரச்சினைகள் இருப்பதற்காக எமக்கான வாய்ப்பையும் தட்டிப்பறிப்பது நியாயமில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை பேச எமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை வழங்க வேண்டும். எமது பிரச்சினைகளை பேசவே எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

இதன்போது சபையை வழிநடத்திக்கொண்டிருந்த ஆளுந்தரப்பு எம்.பியான சாந்த பண்டார கூறுகையில், 

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, வரவு செலவு விவாதத்தில் பிரதான கடமை எதிர்க்கட்சிக்கே உள்ளது. அமைச்சுக்கான மொத்த செலவீனங்களில் வெட்டிவிடும் யோசனை எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி அவர்களின் கடமையை இன்று முறையாக செய்யவில்லை. ஆகவே நிலையியல் கட்டளைக்கு அமைய சபையில் விவாதங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன,

எதிர்க்கட்சியினரின் பிரதான வெட்டிவிடும் யோசனைக்கான உரைகளில் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பியின் பெயரும் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் இல்லை என்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளன. வடக்கு மக்களின் பிரச்சினைகளை பேச வந்துள்ளவர்களை நிராகரிக்க முடியாது. கோவிந்தன் கருணாகரம் எம்.பியின் பெயரும் உள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபையை வழிநடத்திக்கொண்டிருந்த ஆளுந்தரப்பு எம்.பியான சாந்த பண்டார,

அமைச்சுக்கான மொத்த செலவீனங்களில் வெட்டிவிடும் யோசனைக்கான பெயர் பட்டியலில் இவர்களின் பெயர் இல்லை, ஆனால் பிரதான உரைகளில் இவர்களின் பெயர்கள் உள்ளன என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன,

அப்படியென்றால் அவர்களுக்கு உரையாற்றும் வாய்ப்பை வழங்க வேண்டும், அதற்கு அரசாங்கமாக நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம், இதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதென்றால் சபைப்படுத்துங்கள் நாம் சபையில் அனுமதியை பெற்றுத்தருகின்றோம் என்றார்.

இதனை அடுத்து உரையாற்ற ஆரம்பித்த சார்ல்ஸ் எம்.பி, வடக்கு கிழக்கின் வீட்டுத்திட்ட பிரச்சினைகளை பேச ஆரம்பித்தார். இதன்போது இடைநடுவே குறுக்கிட்ட சபையை வழிநடத்திக்கொண்டிருந்த ஆளுந்தரப்பு எம்.பியான சாந்த பண்டார:- நிலையியல் கட்டளைக்கு அமைய சபையில் விவாதிக்க அனுமதி இல்லை, ஆகவே அமைச்சரின் அனுமதியுடன் ஏதேனும் திருத்தங்களை முன்வைத்து காரணிகளை கூற முடியும். விவாதிக்க சென்றால் அது நிலையியல் கட்டளைக்கு முரணானதாக அமையும் என்றார்.