இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவை பாகிஸ்தானில் கொடூரமாக எரித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் அந் நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெஷாவரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை பிரஜை எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

"இது முஸ்லிம் இளைஞர்களின் இளமைக் குதூகலம், இது எப்போதும் நடப்பது தான். இஸ்லாமிய மதம் நிந்திக்கப்பட்டதாக இளைஞர்கள் உணர்ந்தால், அதை காக்க இளைஞர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இக் கூற்று சர்வதேச ரீதியில் மிகுந்த சர்ச்சையினை தோற்றுவிற்றுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் முகாமையாளராக பணியாற்றிவந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமர என்பவர், தான் பணிபுரிந்த தொழிற்சாலையின் வெளிச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரோட்டியை அகற்றுமாறு கடந்த வெள்ளிக்கிழமை கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சுவரொட்டி தெக்ரிக் - இ - லெப்பை பாகிஸ்தான் அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அந்த சுவரோட்டியில் மதம் சார்ந்த வாசகங்களும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் சுவரோட்டியை பிரியந்த குமார அகற்றியமை தொடர்பில் ஆத்திரமடைந்த தெக்ரிக் - இ - லெப்பை அமைப்பினர் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்டுத்தியதாக கூறி பிரியந்தா குமாரவை கடுமையாக தாக்கி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலைக்கு வெளியே திரண்ட  ஆயிரக் கணக்கான மக்கள் பிரியந்தா குமாரவை சரமாரியாக தாக்கி நடு வீதியில் வைத்து அவரை குற்றுயிராய் தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.