ரணில் - மைத்திரி நல்லாட்சி வலையில் மூன்று அரசியல் கட்சிகள் விழுந்துள்ளன. 

இந்த கட்சிகளை சார்ந்த நான்கு பேருக்கு அமைச்சு பதிவிகள் வழங்குவதற்கு பேரம் பேசப்பட்டுள்ளது. 

ஐந்தாண்டு திட்டத்திற்கு தேவையான அரசியல் ஸ்தீரதன்மையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இதனடிப்படையில் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களை குறி வைத்து காய் நகர்த்து நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. 

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம், டக்ளஸ் தேவானந்தா மற்றும் முஸ்லிம் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் குறித்த நபர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவது குறித்து பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி சமர்பிக்க உள்ளதோடு அதற்கு பின்னர் குறித்த பதவிகளை வழங்கவும் அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். 

நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து இரகசிய பேச்சு வார்த்தைகளில்  ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஈடுப்பட்டுள்ளனர். 

இதேவேளை இ.தொ.க. பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தலைவர் முத்துசிவலிங்கம், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை அரசில் இணைத்துக் கொண்டு  பதவிகளை வழங்குமாறு முக்கிய நாடு ஒன்று அரசிற்கு இராஜதந்திர ரீதியில் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரியவருகிறது. 

தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவை தேசியப் பட்டியிலில் உள்வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் குருநாகலையில் இடம்பெற்ற  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்திலும் கெம்பல் பார்க்கில் இடம்டபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது சம்மேளனத்திலும் கலந்து கொண்டு முன்வரிசையில் அமர்ந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.