(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துரையாடினர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான முன்முயற்சிகள் மற்றும் பிராந்திய நிறுவனங்களில் கூட்டு முயற்சிகள் ஆகியன தொடர்பில் இதன்போது குறிப்பாக கலந்துரையாடப்பட்டன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் கடந்த சனிக்கிழமை இந்து சமுத்திர மாநாட்டு ஆரம்பமானது. 

'சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல்' என்ற தொனிப்பொருளில், இம்முறை மாநாடு இடம்பெற்றது.

இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகள் மற்றும் அந்தக் கடல் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொது நலன்கள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்துக்காக, 2016ஆம் ஆண்டில், 'இந்து சமுத்திர மாநாடு' ஆரம்பிக்கப்பட்டது. 

இதன் நான்காவது மாநாடு, 2019 ஆம் ஆண்டில், மாலைதீவில் இடம்பெற்றதோடு, அதன்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வழக்கத்துக்கு மாறான சவால்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.