லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

Image

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு தனஞ்சய டி சில்வாவின் சகலதுறை ஆட்டம் உறுதுணையாக இருந்தமை விசேட அம்சமாகும்.

பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா நான்கு ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 18 ஓட்டங்களை மாத்திரம் வழங்கினார். அதேநேரம் காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் அதிரடி வீரர்களான தனுஷ்க குணதிலக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் காலி அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

எனினும் ஆரம்பம் முதலே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆக்ரோஷமான பந்துப் பரிமாற்றங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

முதல் ஆறு ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அணி சார்பில் பென் டங்க் 38 ஓட்டங்களையும், இசுறு உதான 25 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற ஏனைய வீரர்கள் குறைந்த ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ்.

117 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் ஆறு விக்கெட்டுகளை காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் பதம் பார்த்தனர்.

இதனால் இலகுவான வெற்றி இக்கட்டான நிலைக்கு சென்றது.

எனினும் 18 ஆவது ஓவருக்காக நுவான் துஷார பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, மூன்றாவது பந்தில் சந்திமால் ஒரு பவுண்டரியை விளாசி அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார்.

 கொழும்பு ஸ்டார்ஸ் அணி சார்பில் சந்திமால் 26 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 24 ஓட்டங்களையும், டேவிட் வைஸ் 22 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.