சியால்கோட்டில் இலங்கைப் பிரஜை பிரியந்த குமாரவை சித்திரவதை புரிந்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மிகவும் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபரை பஞ்சாப் பொலிஸார் திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

'Most-wanted' suspect in Sri Lankan citizen’s lynching arrested

இம்தியாஸ் அலியா பில்லி என அடையாளம் காணப்பட்ட பிரதான சந்தேக நபர், தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த இலங்கையரை சித்திரவதை செய்து பின்னர் அவரது உடலை அவமானப்படுத்தியதாக பஞ்சாப் மாகாண பொலிசார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பொலிஸ் சோதனைகளில் இருந்து தப்பி ஓடிய இம்தியாஸ் ராவல்பிண்டி செல்லும் பேருந்தில் தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 27 பிரதான சந்தேகநபர்கள் உட்பட 130 க்கும் மேற்பட்டவர்களை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேநேரம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளின் கீழ் 900 நபர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சியால்கோட்டில் மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் சடலம் பஞ்சாப் தலைநகரில் இருந்து கொழும்புக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

சடலம் அம்பியூலன்ஸின் உதவியுடன் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அரச மரியாதையுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.