2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை ஜெயன்ட்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களை குவித்தது.

முதல் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நிரோஷன் திக்வெல்ல - பிலிப் சால்ட் ஆகியோர் 97 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் திக்வெல்ல 37 ஓட்டங்களுடனும், சால்ட்  27 பந்துகளில் 5 சிக்ஸர்க், 4 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அவர்களுக்கு அடுத்தபடியாக தசூன் சானக்க 24 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 22 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் கண்டி வோரியர்ஸ் சார்பில் லஹிரு குமார நான்கு ஓவர்களில் 34 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அல் அமீன் 2 விக்கெட்டுகளையும், சசிந்து கொலம்பகே மற்றும் ரோவ்மேன் பவுல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் 191 என்ற கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அஞ்சலோ பெரேரா தலைமையிலான கண்டி வோரிஸர்ஸ் அணியினரால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அணி சார்பில் அதிகபடியாக ரோவ்மேன் பவுல் 42 ஓட்டங்களையும், சசிந்து கொலம்பகே 27 ஓட்டங்களையும் மற்றும் அஞ்சலோ பெரேரா 24 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் தம்புள்ளை ஜெய்ன்ட் சார்பில் நுவான் பிரதீப் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர், தசூன் சானக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தம்புள்ளை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

Image