மருத்துவமனைகள் திறந்தவெளி குப்பைக் கிடங்குகளில் கழிவுகளை கொட்டுவதாகவும், அல்லது சுற்றுப்புறங்களை மாசுபடுத்துவதாகவும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொவிட் - 19 தொற்றுநோய் மருத்துவக் கழிவுகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், இது இப்போது கழிவுகளை சுத்தம் செய்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளர்கள் மற்றும் பொதுவாக சமூகத்திற்கு மாசுபாடு தொடர்பில் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

உயிரியல் மருத்துவ மற்றும் சுகாதாரக் கழிவுகளை திறம்பட நிர்வகிப்பதற்கு, முறையாக இனங்காணல், தரம் பிரித்தல், சேகரிப்பு, களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து, சிகிச்சை மற்றும் அகற்றல், அத்துடன் சிறந்த தரவு முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் சுகாதார ஆளணியின் விரிவான பயிற்சி ஆகியவை தேவையாக உள்ளன. 

இந்த மருத்துவக் கழிவு உற்பத்தியும் அதன் விளைவுகளும் திட்டமிடல் மற்றும் கொள்கை மேம்பாட்டிற்கு முக்கியமானவை என்றாலும், இலங்கையில் தேசிய தரவுகள் கிடைப்பது மற்றும் அதன் துல்லியம் ஆகியவற்றில் குறைபாடு மற்றும் முட்டுக்கட்டை உள்ளது.

இதைக் கருத்திற்கொண்டு, நாட்டில் உற்பத்தியாகும் சுகாதாரக் கழிவுகளின் வகை மற்றும் அளவு, தற்போதைய முகாமைத்துவ நடைமுறைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் இலங்கையில் சுகாதாரக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை மதிப்பிடுவதற்காக, இலங்கையில் காணப்படும் சுகாதாரக் கழிவு முகாமைத்துவக் கட்டமைப்புகளின் துரித மதிப்பீடு 2020 ஒக்டோபர் முதல் 2021 மார்ச் வரை நடத்தப்பட்டது. 

சுகாதார அமைச்சின் சார்பாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் இலங்கையில் துரித மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதுடன், நடைமுறைக்கு ஏற்ற வகையில் முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நாடு முழுவதும் உள்ள 40 சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் அவை நடத்தப்பட்டன. 

சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. பிரிவு 1, ஆதார வைத்தியசாலைகளுக்கு மேற்பட்ட பெரிய அளவிலான அரசாங்க வைத்தியசாலைகளை உள்ளடக்கியதுடன், பிரிவு 2, பிரதேச வைத்தியசாலைகளுக்குக் கீழே உள்ள சிறிய அளவிலான அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கியது. பிரிவு 3 இல் தனியார் சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டன. 

சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, பிரிவு 1 மற்றும் 2 இலிருந்து பிறப்பிக்கப்படும் மொத்த தொற்று மற்றும் கூர்மையான கழிவுகள் (சருமத்தில் காயத்தை ஏற்படுத்தக்கூடிய உயிரியல் மருத்துவக் கழிவுகளின் ஒரு வடிவம்) தினசரி 25.38 தொன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதில் 94% ஆனது பிரிவு 1 இல் உள்ள சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் பிறப்பிக்கப்படுகிறது. 

இவற்றில் 31% கதிரியக்கக் கழிவுகளும், 91% ஆய்வுகூட இரசாயனக் கழிவுகளும் அடங்கும். பிரிவு 2 இத்தகைய கழிவுகளில் 24% மட்டுமே பதிவாகியுள்ளது. இரு பிரிவுகளும் முறையே 80.3% மற்றும் 65.7% மருந்துக் கழிவுகளைப் பதிவு செய்துள்ளன.

கழிவு முகாமைத்துவத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பகுதி, பாகங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்த முடியாத மற்றும் அபாயகரமான மற்றும் அபாயமற்ற பொருட்களாக தரம் பிரிப்பதாகும். 

பொதுவாக பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் பொதுக் கழிவு வகைகளுடன் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 ஆகிய இரண்டிலும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில், தொற்றுக் கழிவுகள் மற்றும் கூர்மையான பொருட்களை தரம் பிரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் தரம் பிரிப்பதில் பயன்படுத்தப்படும் கழிவு வகைகள் காண்பிக்கின்றன. 

இதற்கிடையில், உக்கும் கழிவுகள் தரம் பிரிக்கும் திட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த கவனத்தைப் பெற்றுள்ளன.

மிகவும் ஆபத்தான சுகாதாரக் கழிவுகளை அழிக்க எரியூட்டல் இன்னும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தகனக் கருவிகளின் முறையான பராமரிப்பு மற்றும் தகனக் கருவிகளின் செயற்பாட்டின் பற்றாக்குறையை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதுடன், குறிப்பாக புகைக்கூண்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற உமிழ்வு அளவு மட்டங்கள் அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றன. 

இந்த தகனக் கருவிகளில் பல, மேற்கூறிய சுகாதார பராமரிப்பு வசதிகளில் இந்த செயல்முறைகள் பற்றிய போதிய அறிவு விளக்கம் இல்லாத ஊழியர்களால் இயக்கப்படுகின்றன. 

போதுமான நிதி மற்றும் உதிரிப் பாகங்கள் இல்லாததால், தகனக் கருவிகளை நிர்வகிக்கும் நிலைமையை மேலும் மோசமாகின்றது.

அபாயகரமான கழிவு சுத்திகரிப்பு தொடர்பில் பிரிவு 1 ஆனது பிரிவு 2 ஐ விட சிறப்பாக செயற்படுகிறது என்பது தெளிவாகிறது. அவற்றின் மருத்துவ கழிவுகளை திறந்த குழிகளில் போட்டு எரிப்பதை 73 சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் ஏழு மட்டுமே மேற்கொள்கின்றன. 

கிடைக்கப்பெற்ற பதில்களின்படி, திறந்த வெளியில் எரிப்பதன் மூலம் அகற்றப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு சுமார் 106 தொன்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் 1,274 தொன் மருத்துவக் கழிவுகள் ஆண்டுதோறும் மெட்டாமைசர்களைப் (Metamizers) பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகின்றன. 

இது ஒரு கலப்பின உயர் அழுத்த வெப்பக்கருவி கட்டமைப்பாகும். இது சாதாரண மருத்துவக் கழிவுகளை எரித்து அகற்றல் போன்ற முறைகளுக்கு பதிலாக சுத்தமான, திறன்மிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு மாற்றுத் தீர்வாகும். 

எவ்வாறாயினும், சில சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் மெட்டாமைசர்களில் இருந்து எஞ்சிய கழிவுகளை அகற்றுவதற்கான முறையான வசதிகள் இல்லை என்பது அங்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயங்களின்போது தெளிவாகத் தெரிகிறது.

பிரிவு 1 மூலம் ஆண்டுதோறும் சுமார் 3,015 தொன் கழிவுகள் மூன்றாம் தரப்பு தனியார் நிறுவனத்திற்கு எரியூட்டப்படுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

பல சுகாதாரப் பராமரிப்பு வசதிகளிலிருந்து கழிவுகளைப் பெறுவதால், தொடர்ச்சியாக இயங்கும் வகையில் சிறந்த மத்திய தொழிற்பாடு முறைமையின் கீழான தகனக் கருவிகளை கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. 

அனைத்து கழிவுகளும் அத்தகைய வசதிகளில் எரியூட்டப்பட்டால், மொத்த dioxin/furans உமிழ்வு 1.300 கிராம் TEQ ஆக குறைவடைகிறது. பிரிவு 2 இலிருந்து உருவாக்கப்படும் மொத்த கழிவுகளில், அண்ணளவாக 55% திறந்த வெளியில் எரிக்கப்படுவதுடன், மேலும் 16% தகனக் கருவிகள் மூலமாக எரிக்கப்படுகிறது. 

மொத்தமாக 13.36 கிராம் TEQ Dioxin மற்றும் Furan ஆகியன பிரிவு 2 இல் இருந்து ஆண்டுதோறும் உமிழப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 2 ஆனது 6% மருத்துவக் கழிவுகளை அரச சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் இருந்து பிறப்பித்தாலும்% இந்தக் கழிவுகளை முறையற்ற வழிமுறையில் அகற்றுவதால், சுற்றுச்சூழலில் மிகக் குறைந்த அளவில் காணப்படும் ஒரு நச்சு இரசாயனமான dioxins மற்றும் furans களின் மொத்த உமிழ்வு அரசாங்க சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் அண்ணளவாக 40% ஏற்படுகிறது. 

இது சிறிய சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் இருந்து மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது.

இதேவேளை, பாதரசம் கொண்ட அளவீட்டு சாதனங்களை படிப்படியாக நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரிவு 1 இலிருந்து மருத்துவக் கழிவுகளை எரித்து தகனம் செய்யும்போது ஆண்டுதோறும் மொத்தம் 179 கிலோ பாதரசம் வளிமண்டலத்திற்குள் வெளியிடப்படுகிறது என்று ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

பிரிவு 2 இல் வெளிப்படும் பாதரசம் ஆண்டுக்கு 10 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. வளியின் தரத்தை அறிக்கையிடுவதற்கான US-EPA சுட்டெண்ணின் பிரகாரம் அதிகபட்சமாக அனுமதிக்கப்படக்கூடிய தினசரி நுகர்வு உடல் எடையின் அடிப்படையில் ஒவ்வொரு கிலோவுக்கும் 0.1 கிராம் ஆகும். 

எனவே, சராசரியாக 70 கிலோ உடல் எடையுள்ள ஒருவருக்கு அனுமதிக்கப்படக்கூடிய அதிகபட்ச பாதரசம் ஆண்டொன்றுக்கு 2.3 கிராம் ஆகும். பாதரசத்தின் நிலையான தன்மையைக் கருத்திற் கொண்டு, டையாக்ஸின் (Dioxin) மற்றும் ஃபுரான் (furan) உமிழ்வைக் காட்டிலும் பாரதூரமானதாக இல்லாவிட்டாலும், சுகாதாரக் கழிவு முகாமைத்துவத்திலிருந்து பாதரச உமிழ்வின் மூலமாக ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான பாதிப்பு கணிசமானது.

மேலும், சுகாதாரப் பராமரிப்பு வசதிகளின் பணியாளர்களின் தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட தொடர்புபட்ட ஏனைய அனைத்து தரப்பினரதும் பாதுகாப்பிற்காக ஒரு தணிவிப்பு மூலோபாயத்தை தோற்றுவித்து செயல்படுத்துவது மிகவும் முக்கியம். 

இதைத் தொடர்ந்து, சுகாதாரம், பாதுகாப்பு, அரச மற்றும் தனியார் துறை சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் அதன் தாக்கங்கள் ஆகியவற்றில் கட்டாய சான்று அங்கீகாரம் அளிக்கப்பட்ட நோக்குநிலை திட்டங்களுடன் கூடிய விரிவான கல்வி மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் நடத்தப்பட்ட மதிப்பீட்டைப் பரிசீலித்த பிறகு, விளைவுகளின் அடிப்படையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

முதலாவதாக சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான அமைச்சுக்கள் உட்பட, மத்திய மற்றும் மாகாணம் போன்ற சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து நிர்வாக கட்டமைப்பின் அனைத்து மட்டங்களிலும் (மத்திய அரசு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள்) நன்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு முயற்சி செயல்படுத்தப்படல் வேண்டும்.

சுற்றாடல் அதிகாரிகள், மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை, தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை போன்ற இதற்கு உதவியான அமைப்புக்களும் இதில் உள்வாங்கப்படல் வேண்டும். 

இந்த அரச முகவர் நிறுவனங்கள் சுகாதாரப் பராமரிப்புக் கழிவு முகாமைத்துவத்துக்காக உயர் அதிகாரம் கொண்ட தேசிய அளவிலான பல பங்குதாரர் கொண்ட வழிகாட்டல் குழுவை இதில் ஈடுபடுத்தவேண்டும்.

புள்ளிவிவர பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளை மேற்கொள்வதுடன், இந்த கணக்கெடுப்பின் நோக்கமானது, எதிர்காலத்தில் சுகாதார அமைச்சுக்கு தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்ள உதவும் சுகாதாரக் கழிவு முகாமைத்துவம் பற்றிய தரவுத்தளத்தை உருவாக்குவதாகும். 

எனவே, சுகாதார அமைச்சு சமநிலையான சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை எட்டவும், இந்த நோக்கத்திற்காக தொடர்ந்து புதுப்பிக்கப்படக்கூடிய முழுமையான தரவுத்தளத்தை நிறுவவும் வேண்டுமென கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மொனராகலை மாவட்ட வைத்தியசாலை மற்றும் கல்முனையிலுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை ஆகிய இரண்டு வைத்தியசாலைகள் வினைத்திறனுடன் கழிவுகளை அகற்றும் முறைகளை அறிமுகப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதன் காரணமாக இதன் முன்னோடித் திட்டங்களை அமுல்படுத்துவற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இலங்கையில் சுகாதார அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ‘நிலைபேண்தகு சுகாதாரப் பராமரிப்பு கழிவு முகாமைத்துவம்: இலங்கையில் வாழ்வுகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு சிறந்த மாற்றத்திற்கு வித்திடுதல்’ செயற்றிட்டத்திற்கான ஆதரவின் மூலமாக இது முன்னெடுக்கப்படுகின்றது. 

சத்துரி அத்தநாயக்க (ஆராய்ச்சி உதவியாளர்) மற்றும் மதுப அபேவர்தன (திட்ட உதவியாளர்) ஆகியோரின் ஆதரவுடன், பொறியியலாளர் காமினி சேனாநாயக்க அவர்களின் தலைமையில், பேராசிரியர் பராக்கிரம கருணாரத்ன (சுற்றுச்சூழல் நிபுணர்), வைத்தியர் சிறில் டி சில்வா (மருத்துவ நிபுணர்), பொறியியலாளர் ரஞ்சித் பத்மசிறி (எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப நிபுணர்) மற்றும்  மைக்கல் கோவிங் (சர்வதேச ஆலோசகர்) ஆகியோர் அடங்கிய வல்லுனர்கள் குழுவால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல், சுகாதாரம்,தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் எல் டி கம்லத் தலைமையிலான தொழில்நுட்ப செயற்பணிக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அவர் ஓய்வுபெறும் வரை ஆலோசகர் குழு பணியாற்றியது. 

வைத்தியர் வி.டி.எஸ்.கே சிறிவர்தன - பணிப்பாளர், சுற்றுச்சூழல், சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு சுகாதார அமைச்சு, சுகாதார அமைச்சின் ஏனைய பிரதிநிதிகள், அஜித் வீரசுந்தர - பணிப்பாளர், கழிவு முகாமைத்துவப் பிரிவு, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, கலாநிதி புத்திக ஹப்புஆராச்சி - குழுத் தலைவர் மற்றும் கொள்கை நிபுணர், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், கலாநிதி வேர்ஜினி மல்லவாராச்சி - தேசிய நிபுணத்துவ அதிகாரி, உலக சுகாதார ஸ்தாபனம், திருமதி நிலுஷா பட்டபண்டி - குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார நிபுணர், யுனிசெஃப் ஆகிய பிரதிநிதிகள் வைத்தியர் இனோகா சுரவீர - சமூக வைத்திய நிபுணர், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதார பணிப்பாளரகம், சுகாதார அமைச்சு மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக கலாநிதி துசித சுகதபால ஆகியோரின் ஒட்டுமொத்த வழிகாட்டலின் கீழ் இது தொடர்பான ஆய்வுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.