கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் வட்டமடு எனும் கிராமத்தில் விவசாயிகளின் காணிகள் கொரோனா மையவாடிக்கு அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

சுமார் பத்து ஏக்கருக்கும் மேற்பட்ட இக் காணியில் கொரோனா ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான ஈடுபாடு காட்டப்பட்ட நிலையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

15 வருடங்களுக்கும் மேலாக விவசாய செய்கையை மேற்கொண்டு வருகிறோம். கொரோனா ஜனாசா என்ற போர்வையில் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்துள்ளார்கள். 

இது விவசாய காணி எங்களுக்கு முன்கூட்டி இது தொடர்பாக அறிவிக்காமல் காணிகளை சுவீகரித்துள்ளனர் என காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா உடல்களை அடக்கம் செய்ய ஆரம்பியுங்கள் அல்லது எங்களை அடக்கம் செய்துவிடுங்கள் என விவசாயி ஒருவர் தனது ஆதங்கத்தையும் இதன் போது தெரிவித்தார்.

இக் காணியை அண்மித்த பகுதியில் குளம் உள்ளது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான இடம் இதுவல்ல உகந்ததல்ல எனவும், மாரி காலங்களில் நீர் கசிவு ஏற்படும் எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தங்களது காணிக்கு பதிலாக மாற்று காணி தருவதாக கூறியும் இது வரைக்கும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது விவசாய செய்கை செய்யும் காலம் இக் காணி சுவீகரிப்பினால் நிலத்தை அடாத்தாக பிடித்து அரச காணி என்ற போர்வையில் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்துள்ளனர். 

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி எங்களது காணியை மீட்டுத் தாருங்கள் என கோரிக்கை விடுக்கின்றனர்.