(எம்.மனோசித்ரா)

தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட 'ஒமிக்ரோன்' பிறழ்வு தற்போது இலங்கைக்குள்ளும் நுழைந்துள்ளது. எனவே எந்தவொரு நாட்டிலிருந்து வருகை தரும் ஒவ்வொரு நபரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தென் ஆபிரிக்காவில் அபாயம் மிக்க ஒமிக்ரோன் பிறழ்வு இனங்காணப்பட்டவுடனேயே 6 நாடுகளிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு சுகாதார அமைச்சிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் தற்போதும் இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 'ஒமிக்ரோன்' பிறழ்வானது ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது இலங்கைக்குள்ளும் இப்பிறழ்வு நுழைந்துள்ளது.

எனவே எந்த நாட்டிலிருந்து வருகை தந்தாலும் வரும் அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்துகின்றது. 

அத்தோடு நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான தடுப்பூசி வழங்கல் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.