(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான அதிகாரப் பகிர்வில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

எமது அரசாங்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை. குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

Articles Tagged Under: நிமல் லன்சா | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான அதிகாரப் பகிர்வில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

வடக்கு, கிழக்கில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாக புதிய களனி பாலம் திறக்கப்பட்டமை மற்றும் கிண்ணியா சம்பவத்தை இணைத்து எதிக்கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.

எமது அரசாங்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை. குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த பகுதிகளில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டன என்றால் அது 30 வருட கால யுத்தத்தின் போதேயாகும். அது நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணியாகும்.

எமது அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கி அதிகாரத்தை வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் கிண்ணியா பாலத்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது. ஆனால் பாலம் நிர்மாணிக்கப்படவில்லை. எனவே அதற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

மக்கள் பாதுகாப்பற்ற முறையில் அங்கு பயணிக்கின்றமையை அறிந்ததால் நாம் பாலத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தோம். பாலம் கட்டப்படுவதும் , படகுப்பாதை கவிழ்வதும் இருவேறு சம்பவங்களாகும். படகுபாதை கிண்ணியா நகரசபையினாலேயே வழங்கப்பட்டுள்ளது. எனவே இவை இரண்டயும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

யாழ் மாவட்டத்தில் 300 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் மாத்திரம் 1500 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள எந்த மாகாணத்திற்கும் அநீதி இழைக்கப்படவில்லை.

அதிகாரம் பகிரப்படுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. அனைத்திற்கும் அரசியலமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். கிண்ணியா பாலத்தையும் களனி பாலத்தையும் ஒப்பிட வேண்டாம். அதனை செய்து மக்களுக்கிடையில் கோபத்தை உருவாக்க வேண்டாம். எம் அனைவருக்கும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தீர்க்க வேண்டும் என்றார்.