(எம்.மனோசித்ரா)

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் பீர் சயிபு வீதியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் , அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை ; கொலையாளிகள் தப்பியோட்டம் | Virakesari .lk

இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் குறித்த நபரை கூரிய ஆயுதத்தினால் பாரதூரமாக தாக்கி தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய பழைய யோன் வீதி, கொழும்பு - 12 பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இது தொடர்பில் கொழும்பு மத்தி குற்ற விசாணைப்பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த கொலை இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலால் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வாழைத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர் அண்மையில் 7 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் கை குண்டு என்பவற்றை தன்வசம் வைத்திருந்தமையின் காரணமாக வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு , மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.

அத்தோடு குறித்த நபர் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.