மட்டக்களப்பில் திராய்மடு புகையிரத பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து  கொழும்பு நோக்கி அதிகாலை 5.45 மணிக்கு சென்ற ரயிலுடன் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.