கடந்த 23.11.2021 அன்று ஏற்பட்ட குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எட்டாக உயர்ந்துள்ளது.

சக்கரையா ஹாலிஸா என்ற 40 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்தவர் ஆவார்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்குண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், 12 நாட்களுக்குப் பின்னர் நேற்று இரவு 9:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதனால் குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

குறிஞ்சாக்கேணியில் பழைய பாலத்திற்குப் பதிலாக களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.

குறித்த பால நிர்மாண வேலைகள் நடப்பதன் காரணமாக தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு பயன்படுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்கு குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்தினர்.

இந்நிலையில் 23.11.2021 அன்று குறித்த படகு கவிழ்ந்ததில் 27 பேர்  நீரில் மூழ்கிய நிலையில் 6 பேர் உயிரிழந்தோடு, சிறுமி ஒருவர் கைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.