பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்து ஆளும் - எதிர்த்தரப்பு கடும் வாய்த்தர்க்கம்

By T. Saranya

04 Dec, 2021 | 08:19 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு ஆளும் கட்சி பிரதம கொறடாவின் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதான எதிர்கட்சி இன்று சபையில் வலியுறுத்தியது.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் பிரதமகொரட லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து, பாராளுமன்றத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். 

எமது தரப்பு உறுப்பினருக்கு இல்லாமல் போயிருந்த 5நிமிட நேரத்தை வழங்கி இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

சபை நடவடிக்கை முடியும்வரை சபையை கொண்டுசெல்ல அனுமதி பெற்றால் மனுஷ் நாணயக்காரவுக்கு இல்லாமல்போன 5 நிமிடங்களை வழங்கவேண்டும் என நாங்கள் தெரிவித்திருந்தோம். 

ஆனால் நேரத்தை அதிகரித்துக்கொண்டபோதும் மனுஷ் நாணயக்காரவுக்கு இல்லாமல்போன 5நிமிடத்தை வழங்கவில்லை. நீங்கள் ஆளும் தரப்புக்கு மாத்திரம் சபாநாயகர் அல்ல. 

அத்துடன் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எமது பக்கத்துக்கு வந்து,அடிக்க முற்பட்டு, தள்ளிவிட்டார்கள். இந்த சபையை உங்களால் கட்டுப்படுத்த முடியாதா? 5நிமிட நேரத்தை வழங்குவதற்கு நீங்கள் இணங்கி இருந்தீர்கள். 

ஆனால் ஆளும் கட்சி பிரதமகொரடாவின் பேச்சைக்கேட்டு நீங்கள் அதனை வழங்க மறுத்தீர்கள். பாராளுமன்றத்தை இவ்வாறு வழிநடத்த இடமளிக்கவேண்டாம். மக்கள்  இந்த பாராளுமன்றம் குறித்து விரக்தியடைந்திருக்கின்றனர்.  

அதனைத்தொடர்ந்து எழுந்த சபைமுதல்வர் தினேஷ் குணவர்த்தன, சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் சபாநாயகரை நோக்கி சென்றவர் எதிர்க்கட்சி உறுப்பினர். சபையை நடத்திச்செல்ல உதவி செய்யவேண்டியது எமது கடமை. அதனால் சபாநாயகரை பாதுகாக்கவே எமது உறுப்பினர்கள் தலைமை ஆசனத்தை நோக்கி சென்றனர். 

அதனால் சபாநாயகரை நோக்கிச்சென்ற எதிர்தரப்பு உறுப்பினரின் செயலையே முதலாவது கண்டிக்கவேண்டும். அதேபோன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய கடிதத்தை எதிர்க்கட்சி பிரதமகொரடா சபாநாயகருக்கு வழங்காமை தொடர்பாகவும் விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்றார.

இதன்போது மீண்டும் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல, எமது உறுப்பிர் பாராளுமன்ற செயலாளர் இருக்கும் இடத்துக்கு சென்றது, தனக்கு கிடைக்கவேண்டிய 5நிமிட நேரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிப்பதற்காகும். 

அவ்வாறு இல்லாமல் சபாநாயகரை அச்சுறுத்த செல்லவில்லை. ஆளும்தரப்பு பிரதமகொரடாவும் ஒருசில உறுப்பினர்களுமே அந்த இடத்துக்கு வந்து எமது உறுப்பினரை தள்ளிவிட்டார்கள் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவிக்கையில், எனது உரையின்போது நேரம் தொடர்பன பிரச்சினை இருந்தது. மேலதிக நேரத்தை பெற்றுக்கொண்டால், இல்லாமல்போன 5நிமிட நேரத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து அதனை நீங்கள் பெற்றுத்தந்தீர்கள். 

ஆனால் ஆளுங்கட்சி பிரதமகொரடா ஜோக்ஸ்டன் பெர்ணான்டோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், எனது பேச்சு நீங்கள் இடைநிறுத்தினீர்கள். அதனால் இதுதொடர்பாக செயலாளரிடம் குறிப்பிடவே அந்த இடத்துக்கு நான் வந்தேன். நான் உங்களை அச்சுறுத்தினேனா? ஆனால் சபாநாயகரின் ஆசனத்துக்கு பின்னால்வந்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டொ, மிகவும் மோசமான வார்த்தைகளால் என்னை பேசினார். 

அதுமாத்திரமல்லாது காஞ்சன விஜேசேகர என்னை தள்ளிவிட்டார். ஹர்ஷடி சில்வா மற்றும் படைக்கல சேவிதர்களும் எனது அருகில் இருந்ததால் அவர்கள் என்னை பாதுகாத்தனர். இல்லாவிட்டால் நான் கீழே விழுந்திருக்கும்.  இதுவா பாராளுமன்ற ஜனநாயகம் என கேட்கின்றேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த நளின் பண்டார தெரிவிக்கையில், சபாநாயகரின் ஆசனத்துக்கு பின்னால், எமது பக்கம் வந்து எமது உறுப்பினரை தாக்கிய ஆளும் தரப்பினர் பிரதமகொரடாவின் செயலை நாங்கள் கண்டிக்கின்றோம். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த ஆளும்தரப்பு பிரமத கொரடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கையில், சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி செல்வதற்கு யாருக்கும் முடியாது. அதனை தடுப்பதற்கே நாங்கள் அந்த இடத்துக்கு சென்றோம். 

சபாநாயகருக்கு கைவைக்க நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. கடந்த அரசாங்கத்தில் சபாநாயகர் எவ்வாறு செயற்பட்டார் என்பதை நாங்கள் மறக்கவில்லை. அதனால் உங்களை அச்சுறுத்திய மனுஷ் நாணயக்கார தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், உங்களை நோக்கி வந்தவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். அதனால் உங்களை யார் அச்சுறுத்தினார் என்பதை நீங்கள் சபைக்கு அறிவிக்கவேண்டும் என்றார்.

இறுதியில் சபாநாயகர் பதிலளிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதேவேளை, நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ் நாயணயக்கார விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தெரிவித்ததால், கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 

அதனைத்தொடர்ந்து பாராளுமன்றம் பகல் உணவுக்காக ஒத்திவைக்கப்பட்டபோது, மனுஷ் நாணயக்காரவை தாக்குவதற்காக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபைக்கு வெளியில் வந்ததாக எதிர்க்கட்சு உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, சபை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது சபைக்கு அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right