(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மத ரீதியிலான பதாகை ஒன்றினை நீக்கிய காரணத்தினால் பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் ஒரு இனக்கும்பலினால் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவின் மரணம் குறித்த சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கவும், பாகிஸ்தானில் பணிபுரியும் ஏனைய இலங்கை பிரஜைகளை பாதுகாக்கவும், அதேபோல் பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும்,பாகிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் தமது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரித்துள்ளது.

பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து எரித்துக்கொல்லப்பட்ட இலங்கை பிரஜை விவகாரம் குறித்து நேற்று சனிக்கிழமை, பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியது. 

சனிக்கிழமை (4) காலையில் விசேட கூற்றொன்றை முன்வைத்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இது குறித்து கூறுகையில்,

 உள்ளக  அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த, பாகிஸ்தானிய தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய முகாமையாளர் பிரியந்த குமாரவின் மரணத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பாகிஸ்தான் பிரதமர் இது குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து நியாயத்தை நிலைநாட்ட எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாம் வரவேற்கின்றோம் என்றார்.

இந்நிலையில் சபாநயாகர் மூலமாக குறித்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்துடனும் கலந்துரையாடி பாகிஸ்தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறும், பாகிஸ்தானில் உள்ள இலங்கை பிரஜைகளை பாதுகாக்கவும், அச்சமின்றி செயற்பட எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கையாளுமாரும் தாம் வலியுறுத்தியுள்ளதாக சபாநாயகர் கேசரிக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.