(எம்.மனோசித்ரா)

பாகிஸ்தான் - சியல்கொட் நகரில் இலங்கை பிரஜையொருவர் அந்நாட்டவர்களால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சியல்கொட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் முகாமையாளரக பணியாற்றிய குறித்த இலங்கையர் கனேமுல்ல - பொகுணசந்தி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பிரியந்த குமார என்ற நபராவார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் , சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடிக்கும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பாக்கிஸ்தானுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் , சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் குறித்த இலங்கை பிரஜை செயற்பட்டதாக அவர் பணிபுரிந்த தொழிற்சாலையிலுள்ள ஏனைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்குள்ளவர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, பின்னர் சடலத்தை எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை தூதரகத்திடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது.

ஜனாதிபதி

பாகிஸ்தானின் சியால்கோட்டில் நடந்த சம்பவம் ஆழ்ந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் நீதியை நிலைநாட்டி, பாகிஸ்தானில் எஞ்சியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று இலங்கை நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர்

பாகிஸ்தானில் பிரியந்த தியவடனா மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைகின்றேன். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கவலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சம்பவத்துடன் தொடர்புபட்ட சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என்பதில் இலங்கையும் இலங்கை மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் பிரதமர்

சியல்கொட்டில் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானம் மிக்கதொரு செயற்பாடாகும் என்று தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் , இதனுடன் தொடர்புடைய விசாரணைகளை நான் கண்காணித்து வருகிறேன்.

இதில் எவ்வித தவறுகளும் இடம்பெறாது. இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இட்டு பாக்கிஸ்தான் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

இந்த சம்பவம் குறித்து இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாவது,

பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கையர் ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டு அவரது உடலை எரித்த சம்பவம் குறித்து இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு  தகவல் கிடைத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின் அதிகாரிகளிடமிருந்து சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை செய்து நீதியை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று இலங்கை எதிர்பார்க்கிறது. அத்தோடு இலங்கை மேலதிக விசாரணைகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. கொல்லப்பட்ட நபரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இணைந்து செயல்படுகிறது.

இதற்குக் காரணமானவர்களைக் கைது செய்யவும், இந்த விவகாரத்தின் உண்மையை விரைவாகக் கண்டறியவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.