(இராஜதுரை ஹஷான்)

கைத்தொழிற்சாலை, தகனசாலை ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை லிட்ரோ, லாப் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் (ஓய்வு) எஸ்.எம்.டி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

எரிவாயு சிலிண்டர்களில்  எதில் மர்கெப்டன் இரசாயன பதார்த்தம்  இலங்கையின் தர நிர்ணயத்திற்கமைய 14  சதவீதம் சேர்க்கப்பட வேண்டும்.

சிலிண்டர் வெடிப்புடனான  பரிசோதனைகளில் எதில் மர்கெப்டன் இரசாயன பதார்த்தம் 5 சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து  தேசிய மட்டத்திலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நேற்று முன்தினம் முதல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை இடைநிறுத்தப்பட்டது.

எரிவாயு சிலிண்டரில் இருந்து வாயு கசிவதை நுகரும் உணர் திறனை தூண்டுவதற்காக எதில் மர்கெப்டன் என்ற இரசாயன பதார்த்தம் எரிவாயு சிலிண்டர்களில் சேர்க்கப்படுகிறது.

கைத்தொழிற்சாலைகள் மற்றும் தகனசாலைகள் ஆகியவற்றின்  பயன்பாட்டிற்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் தரம் முழுமையாக பரிசோதனை முன்னெடுக்கப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் தரம் தொடர்பில் தற்போது பல்வேறு மட்டத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

நாட்டின் வௌ;வேறு பகுதிகளில் கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் எரிவாயு சிலிண்டருடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள ஜனாதிபதி கடந்த மாதம் 30ஆம் திகதி  8பேர் அடங்கிய குழுவை நியமித்தார்.

சம்பவத்திற்கான காரணம்,அதற்கான தீர்வு உள்ளடங்கிய அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி  குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீடுகள்,வியாபார நிலையங்களை 8 பேர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களிலும் ஆய்வு நடவடிக்கைகளை குழுவினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தது.