(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் இறுதி உரையை எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ் நாணயக்காரவுக்கு 13 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. 

அவர் தனது உரையை ஆம்பித்து உரையாற்றுகையில் அரசாங்கத்தினால் தீர்வு காணமுடியாமல்போயிருக்கும் பல விடயங்களை பட்டியலிட்டுக்கொண்டு சென்றதுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் உரையாற்றிக்கொண்டிருந்தார். 

இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவரது உரைக்கு தடங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆசனங்களில் இருந்து நின்றவண்ணம் எதிர்ப்பு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். 

அத்துடன் பல தடவைகள் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பியபோது சபாநாயகரும் அவர்களுக்கு அதற்காக அவகாசம் வழங்கிவந்தார்.

அதன் காரணமாக மனுஷ நாயணக்காரவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அவரால் அவரது பேச்சை முடித்துக்கொள்ள முடியாமல்போனது. அதற்கிடையில் சபை நடவடிக்கை முடியும்வரை நேரத்தை பெற்றுக்கொள்ளவும் சபாநாயகர் சபையில் அனுமதியை பெற்றுக்கொண்டிருந்தார். 

அவ்வாறான நிலையில் மனுஷ நாணயக்காரவுக்கான நேரம் முடிந்ததாக தெரிவித்து சபாநாயகர் ஒலிவாங்கியை முடக்கினார். அதனைத்தொடர்ந்து விவாதத்தில் பதிலளித்து உரையாற்று அமைச்சர் சரத் வீரசேகரவின் பெயரை அழைத்தார்.

இதன்போது எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து, அவரது பேச்சை முடிப்பதற்கு சில நிமிடங்களை வழங்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார். அதற்கு சபாநாயகர் இணங்க மறுத்துவிட்டார். 

இதன்போது நளின் பண்டார எழுந்து, சபை நடவடிக்கை முடியும்வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் உரையை முடிப்பதற்கு நேரம் வழங்கவேண்டும் என வலிறுத்தினார். அதன்போதும் சபாநாயகர் இணங்காமல் அமைச்சர் சரத் வீரசேகரவை உரையாற்றுமாறு குறிப்பிட்டார்.

இதன்போது ஆத்திரமடைந்த  சபையில் இருந்த ஹர்ஷ்டி சில்வா சபாநாயகருக்கு அருகில் சென்று தங்கள் பக்க நியாயத்தை எடுத்துகூறிக்கொண்டிருக்கையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபை நடுவுக்கு வந்து கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் பிரதான எதிர்க்கட்சியைச்சேந்த சுமார் 10 உறுப்பினர்கள் வரையே இதன்போது சபையில் இருந்து அவர்கள் பக்க நியாயத்தை உரத்த குரலில் தெரிவித்துக்கொண்டிருந்தனர். 

நிலைமை கைகலப்புவரை செல்லாமல் தடுப்பதற்கு படைக்கல சேவிதர்களும் இதன்போது சபைக்கு நடுவே வந்து உறுப்பினர்களை சமாதானப்படுத்திவந்தனர். அத்துடன் சபை நடுவில் வந்து சத்தம்போட்டுக்கொண்டிருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களை ஒருசிலர் சமாதானப்படுத்திக்கொண்டு ஆசனங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

அதனைத்தாெடர்ந்து நளின் பண்டாரவுக்கு ஒழுங்கு பிரச்சினைக்கு இடமளித்தபோதும் அவரால் விடயத்தை தெரிவிப்பதற்கு முன்னர் ஒலிவாங்கி முடக்கப்பட்டு, அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு உரையாற்றுமாறு தெரிவிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த பிரதான எதிர்க்கட்சியினர் கோபத்துடன் தங்களது மேசைகளில் இருந்த புத்தங்களை தூக்கி எறிந்துவிட்டு, சபையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதன்போது சபையில் இருந்து தமிழ் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்தவாறு சபை நடவடிக்கையை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர்.