(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்  வனிந்து ஹசரங்க அங்கம் வகிக்கும் வஹாப் ரியாஸ் தலைமையிலான டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியும் டுவெய்ன் பிராவோ தலைமையிலான டெல்லி புள்ஸ் அணியும் இன்று இரவு மோதிக்கொள்ளவுள்ளன.

அபுதாபி நகரில் நடைபெறவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, டீம் அபுதாபி மற்றும் பங்களா டைகர்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாம் இடத்துக்கான போட்டி இறுதிப் போட்டிக்கு முன்னதாக இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இலங்கையைச் சேர்ந்த டெக்கன் அணியின் வனிந்து ஹசரங்க மற்றும் டெல்லி புள்ஸ் அணியின் டொமினிக் டிரேக்ஸ் ஆகியோர் தலா 19 விக்கெட்டுக்களை கைப்பற்றி முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். 

இன்றைய இறுதிப் போட்டி இவர்களுக்கிடையில் பலத்த போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், இப்போட்டித் தொடரில் 348 ஓட்டங்களை (11இன்னிங்ஸ்) குவித்து அதிக ஓட்டங்களை குவித்த வீரராக பங்களா டைகர்ஸ் அணியின் ஹஸ்ரத்துல்லாஹ் ஸாஸாய் உள்ளதுடன், டெல்லி புள்ஸ் அணியின் ரஹ்மானுல்லாஹ் 329 ஓட்டங்களுடன் (12 இன்னிங்ஸ்) 2 ஆவது இடத்தில் உள்ளார். 

இதில் சென்னை பிரேவ்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கையின் பானுக்க ராஜபக்ச 249 ஓட்டங்களுடன் 6 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.