(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் வவுனதீவில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கம் திருப்ப ஆலோசனை வழங்கியவர் யார் எனவும்,  ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அந்தச் சம்பவத்தை  பொறுப்பேற்பதற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்ற  தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் வலியுறுத்தினர்.

ஆட்சியாளர்கள் இனவாதத்தை தூண்டினாலும் நாட்டு மக்கள் இனவாதிகளாகவில்லை:  அனுரகுமார | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு  ஆகியவற்றுக்கான  நிதி ஒதுக்கீடுகள் மீதான  குழுநிலை விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டப்படுவதை தடுப்பதற்காக  இந்தப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டிய ஐந்து கேள்விகள் என்னிடத்தில் உள்ளன. 

அதில் முதலாவதாக வவுனதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கொலை சம்பவமானது சஹரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமையாக பின்னர் வெளியாகியிருந்தது. 

ஆனால் அதனை முன்னாள் விடுதலைப் புலிகள் செயற்பாட்டாளர்களின் பக்கம் கொண்டு செல்ல ஆலோசனை வழங்கியது யார்? 52 நாட்கள் ஆட்சிக் காலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்படியென்றால் அந்த நேரத்தில் அவர்களை கைது செய்திருந்தால் ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம். ஆனால் அந்த சம்பவத்தை விடுதலைப் புலிகளின் பக்கத்திற்கு திருப்ப வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்பதனை வெளியிட வேண்டும்.

இரண்டாவதாக, சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் சம்பளம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறு அவர்களுக்கு சம்பளம் வழங்கியது யார்? அந்த சம்பளத்திற்காக பரிந்துரைத்தது யார்? அந்த சம்பளம் யாருக்கு வழங்கப்பட்டது என்பதனை வெளியிட வேண்டும்.

மூன்றாவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்கிருந்த நபர், அந்தத் தாக்குதலை நடத்த முடியாது தெஹிவளையில் பள்ளியொன்றுக்கு சென்று பின்னர் தங்குமிடமொன்றில் அதனை வெடிக்க வைக்கின்றார்.

ஆனால் அந்த நபர் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்து வெளியேறி குறித்த குண்டை வெடிக்க வைக்கும் வரையில் புலனாய்வு அதிகாரிகள் அந்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

அந்தத் தாக்குதல் நடக்கும் வரையில் பெயர் விபரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பொலிஸ் அதிகாரிகள் எப்படி வீட்டுக்கு சென்றனர் என்று கூற வேண்டும்.

நான்காவதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய ஆவணங்கள் இருந்த கணனிகளை பயன்படுத்திய நபர்கள் யார் என்ற தகவல்களை வெளியிடுங்கள்.

இறுதியாக தாக்குதலின் பின்னர் அதனை பொறுப்பேற்குமாறு ஐ.எஸ்.ஐ.ஸ் அமைப்புக்கு வலியுறுத்திய இங்கியிருந்து கதைத்த சிறிய சஹரான் என்ற நபருக்கு அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸாரோ, அரச புலனாய்வு அதிகாரியோ கதைத்துள்ளார்களா? இவற்றுக்கு பதிலளியுங்கள் என்றார்.