(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இன்றைய தினம் நாடு முழுவதும் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது.

சுமார் 7 மணித்தியாலங்கள் வரையில் நீடித்த இந்த மின் துண்டிப்பின் காரணமாக நாட்டின் முழு செயலொழுங்கும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக போக்குவரத்து, மருத்துவம், வங்கி உள்ளடங்களாக நாட்டின் பிரதான சேவைகள் ஸ்தம்பிதமடைந்ததன் விளைவாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.

மின்சார சபை தொழிற்சங்கங்களே மின்விநியோக தடைக்கு காரணமாக அமைந்திருக்க கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர், கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின்நிலையத்தை தவிர்ந்த ஏனைய சகல மின்நிலையங்களின் மின்விநியோகங்களும் இன்று மாலை 5.40 மணியளவில் வழமைக்கு திரும்பின. 

6 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுப்பட்டார்கள். 

எனினும் மின் துண்டிப்பு ஏற்பட்டதை தொடந்து தொழிற்சங்க போராட்டத்தை இன்று மாலை 4.30 மணி முதல் தற்காலிகமாக  கைவிட்டுள்ளனர்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிபபு நிலையத்தை மூடியுள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின்துண்டிப்பு தொடர்ச்சியாக இடம்பெற வாய்ப்புள்ளது. 

நாடு தழுவிய ரீதியில் இன்று ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக நீர்வழங்கல், வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

மின்துண்டிப்பு காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் சேவை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேர அட்டவணைக்கு அமைய புகையிரத சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக புகையிரத சமிஞ்சை கட்டமைப்பு செயலிழந்துள்ளதால் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்சார தடை ஒரு தரப்பினரது திட்டமிட்ட சதி ஆகவே முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் இன்று கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். 

முறைப்பாடு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பாக்கப்பட்டு  விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.