(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)  

விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை நிறுத்த வேண்டும் என்பதே எமது கட்சியினதும், தலைவர் சஜித் பிரேமதாசவினதும் நிலைப்பாடு. 

எமது அரசாங்கம் கண்டிப்பாக ஆட்சியமைக்கும் வேளையில் இந்த செயற்பாடுகள் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும் என முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கத்திலும் பாதுகாப்பு செயலாளர் அதிகாரத்தை கையில் எடுத்து மாவீரர் தினத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர்தின அனுஷ்டிப்பு நிகழ்வுகள் குறித்து ஆங்காங்கே கேள்விப்படுகின்றோம். தேசிய மட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்து மாவீரர் தினத்தை நிறுத்தியேயாகவேண்டும். 

மாவீரர் தினத்தை நிறுத்த வேண்டும் என்பதே எமது கட்சியினதும், தலைவர் சஜித் பிரேமதாசவினதும் நிலைப்பாடாகும். நான் இது குறித்து அவருடன் கலந்துரையாடியே இந்தக் கருத்துக்களை முன்வைக்கின்றேன். 

பாதுகாப்பு செயலாளர் அதிகாரத்தை கையில் எடுத்து மாவீரர் தினத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூற முடியும், அதற்காக பிரபாகரனின் பிறந்தநாளை வைத்துக்கொண்டு அதனை மாவீரர் தினமாக கொண்டாட முடியாது. அதற்கு எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். 

விடுதலைப்புலிகளாக உயிரிழந்தவர்களை நினைவுகூறுவது சட்டவிரோதமான செயற்பாடாகும். விடுதலைப்புலிகள் இயக்கமானது சட்டவிரோதமான அதேபோல் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். 

அவ்வாறு இருந்தும் வெளிநாடுகளில் இன்றும் விடுதலைப்புலிகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு அனுஷ்டிப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனை அங்கீகரிக்க முடியாது.

மேலும், விடுதலைப்புலிகளையும் மக்கள் விடுதலை முன்னணியையும் ஒப்பிடுகின்றனர். இவை இரண்டுமே ஒன்றல்ல. மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டில் அரசியல் மாற்றமொன்றை செய்யவே முயற்சித்தனர். அந்த அரசியல் மாற்றத்துக்கான புரட்சி ஒன்றினை செய்தனர். அதன்போது ஆயுதம் ஏந்திய காரணத்தினால் அதனை அடக்க நேர்ந்தது.

 ஆனால் விடுதலை புலிகள் போன்று நாட்டை இரண்டாக்கவோ அல்லது ஒரு இனத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவோ ஜே.வி.பி நினைக்கவில்லை. 

எனினும் நாட்டை இரண்டாக்குவதே விடுதலைப்புலிகளின் கொள்கையாகும். இன்றும் அதே நிலைப்பாட்டில் இருந்தே அவர்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோல் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் மௌனமான அரசியல் உந்து சக்தியொன்று உள்ளது. தெற்கு மக்கள் மத்தியில் விரோதத்தை உருவாக்கும் நோக்கத்தில் இவர்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றனர். இதனை அனுமதிக்கக்கூடாது. 

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக ராஜீவ்காந்தி கொலையை, ஜே.ஆர் ஜெயவர்தன கொலையை, ரஞ்சன் விஜயரத்ன கொலையை, மஹிந்த விஜயசேகரவை ஊனமாக்கியத்தை, கொப்பேகடுவ கொலையை, தேரர்களை பேருந்தில் வைத்து கொலை செய்ததை, தலதா மாளிகை தாக்குதலை, ஸ்ரீமாபோதி மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகளை, அமிர்தலிங்கம் கொலையை, கிராமங்களில் கர்ப்பிணி பெண்களை, சிறுவர்களை வெட்டிக்கொலை செய்ததை நினைவுபடுத்தவே முயற்சிக்கின்றனர். அதற்கு இந்த நாட்டில் இடமளிக்க நாம் தயாரில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எனக்கு பாதுகாப்பு அமைச்சை தருவதாகவும், அதன் மூலமாக இந்த செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்க எனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குவதாகவும் எமது தலைவர் எனக்கு வாக்குறுதியளித்துள்ளார். 

ஆகவே எமது அரசாங்கம் கண்டிப்பாக ஆட்சியமைக்கும், அதேபோல் இந்த செயற்பாடுகள் முழுமையாக நிறைவேறும். குற்றவாளிகள் எந்தப்பக்கம் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கையில் எமது இன்னொரு இனத்திற்கு எதிராக யுத்தம் செய்ய நேர்ந்தது, அது வேதனைக்குரிய விடயமாகும். 

ஆகவே யுத்த வெற்றியை கொண்டாட நினைவுத்தூபி உருவாக்க வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது எமது கலாசாரம் அல்ல, தூபியின் உருவாக்கம் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றை அடையாளப்படுத்தும் என்றால் அதனை வரவேற்கலாம் என்றார்.