(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லுறவின் முக்கியத்துவம் குறித்து இந்திய சந்திப்புகளால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எரிபொருள் இறக்குமதி , எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீன மயப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக டெல்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்  தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அழைப்பிற்கமைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த மாதம் 30ஆம் திகதி இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார். 

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், இந்திய நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு புது டில்லியில் இடம்பெற்றது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ  இந்திய நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதுடன்,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். 

அத்துடன் இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிப் பூரியுடனும்,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோகர் ஸ்ரீ அஜித் குமார் தோவலுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

இந்திய பிரமுகர்களுடனான சந்திப்பின் போது தனக்கும்,தனது தூதுகுழுவினருக்கும் இந்தியா வழங்கிய விருந்தோம்பல் மற்றும் வருகைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், பல ஆண்டு காலமாக இந்தியா இலங்கைக்கு பல துறைகளில் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பது முக்கியமானது எனவும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் முக்கிய பிரமுகர்களுடன்  இடம்பெற்ற சந்திப்புக்களில் இருதரப்பு உறவுகள் தொடர்பான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அம்சங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை -இந்தியா இருதரப்பு உறவின் வளர்ச்சி குறித்து இரு தரப்பினரும் திருப்தியடைந்துள்ளனர். இரு நாடுகளுக்குமிடையில் தற்போது தொடரும் பொருளாதார உறவை மேலும் விரிவுப்படுத்தும் திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் சந்திப்பின் போது அடையாளப்படுத்தப்பட்டது.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னரான சவால்களை எதிர்க் கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்டங்களை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய பிரமுகர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒற்றுமையினையும், நல்லுறவையும் இந்திய பிரமுகர்கள் எடுத்துரைத்தனர். இந்தியா என்றும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும். 

தற்போதைய சூழ்நிலையில் அயல்நாடு என்ற ரீதியிலான கொள்கையில் ஒத்துழைப்புடன் இந்தியா செயற்படும் என இந்திய பிரமுகர்கள் நிதியமைச்சர் பஷி;ல் ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டார்கள்.

இரு நாடுகளுக்குமிடையிலான குறுகிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்தும் திட்டங்களை இலகுப்படுத்தும் வழிமுறைமைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டன. 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவு,மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் கடன் வரி நீடிப்பை கருத்திற் கொண்டு அவசர உணவு மற்றும் சுகாதார சேவை செயற்திட்டம்.

எரிபொருள் இறக்குமதி , எரிசக்தி பாதுகாப்பு திட்டம்,திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தல்.

நடைமுறையில் உள்ள நிலுவை தொகை சிக்கல்களை தீர்ப்பதற்காக இலங்கைக்கு உதவுவவதற்கு நாணயப் பரிமாற்றத்தின் ஊடாக சலுகை வழங்கல்,மற்றும் பொருளாதர முன்னேற்றம், தொழில்வாய்ப்பை விரிபுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளை இலகுப்படுத்தல் ஆகிய விடயங்கள் இருதரப்பு பேச்சுவார்தையில் ஆராயப்பட்டன. அவை குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்பிற்கான நான்கு தூண்கள் என கருதப்படுகிறது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்துவதற்கு இரு தரப்பினராலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நேரடியான தொடர்பு நிலை பேணுவதற்கு தீர்மானித்துள்ளனர்.