(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயற்பட்டதும் புலனாய்வு பிரிவை பலவீனப்படுத்தி இருந்தது. அவர்களின் இயலாமையின் காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது என அமைச்சர் ரோஹித அபேவர்தன தெரிவித்தார்.

மதத்தலைவர்களின் கருத்திற்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் - ரோஹித  அபேகுணவர்தன | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததுடன் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில்தான் சஹ்ரானின் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் காத்தான்குடி உட்பட கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றன. இந்த சம்பவங்களுக்கு பின்னரே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் இடம்பெறப்போவதென்ற தகவல்கள் அனைத்தும் இருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கடந்த அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதை தடுக்க தவறியதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. ஆனால்  குண்டுத்தாக்குதலை நாங்கள் நடத்தியதுபோலவே எதிர்க்கட்சியினர் கதைக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் இயலாமையினாலே தாக்குதல் இடம்பெற்றது. தேசிய பாதுகாப்பு குறித்து கண்டுகொள்ளவில்லை, புலனாய்வு துறையினரை பலவீனப்படுத்தினர். அதன் விளைவே ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமாகியது.

அத்துடன் கடந்த அரசாங்கம் தங்களது இயலாமையை மறைப்பதற்காக தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தி வந்தது. அவர்கள் செய்த தவறினால்தான் மாகாணசபை தேர்தல் 3 வருடங்களாக தடைப்பட்டிருக்கின்றது.

ஆனால் நாங்கள் உரிய காலத்துக்கு தேர்தல்களை நடத்துவோம். மாகாணசபை தேர்தலையும் நடத்தி, அதில் சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியீட்டிக்காட்டுவோம். அதனால் தேர்தல்களுக்கு நாங்கள் அச்சப்படமாட்டோம்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சு பதவியை வழங்குவதாக கட்சியின் தலைவர் வழங்குவதாக தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

நாங்கள் தெரிவிப்பது, நீங்கள் பாதுகாப்பு அமைச்சை பெறவேண்டியதில்லை. நீங்கள் தேர்தலில்போட்டியிட்டு ஜனாதிபதியாகுங்கள். அதற்கான நடவடிக்கையை நீங்கள் மேற்கொண்டுவருவதை நாங்கள் காண்கின்றோம். அதனால்  சரத்பொன்சேகா, யாருடைய கதையையும் கேட்டு ஏமாறாமல் ஆரம்பித்த அரசியலை முன்னுக்குகொண்டுசெல்லுங்கள் என்றார்.