மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 164 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Image

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள், இலங்கையுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது.

முதல் போட்டியில் இலங்கை 187 ஓட்டங்களினால் வெற்றி பெற, இரண்டாவது போட்டி நவம்பர் 03 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுததாடிய மேற்கிந்தியத்தீவுகள் 10 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்களை பெற்றது.

49 ஓட்ட பின்னடைவுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை ஐந்தாம் நாளான இன்று 124.4 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களை பெற்று டிக்கேள செய்தது.

இலங்கை சார்பில் அதிகபடியாக தனஞ்சய டிசில்வா 155 ஓட்டங்களையும் பத்தும் நிஸ்ஸாங்க 66 ஓட்டங்களையும், லசித் எம்புல்தெனிய 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனால் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 297 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி லசித் எம்புல்தெனிய மற்றும் ரமேஷ் மெண்டிஸ் சுழல்களில் சிக்கி 132 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இரு சுழற்பந்து வீச்சாளர்களும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் அதிகபடியாக  பொன்னர் 44 ஓட்டங்களையும், ஜெர்மைன் பிளாக்வுட் 36 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.