'ஒமிக்ரோன்' தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை

03 Dec, 2021 | 04:55 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் 'ஒமிக்ரோன்' தொற்றுடன் இனங்காணப்பட்ட நபர் ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டமையால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவராவார். 

தற்போது இவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அவருடன் நேரடி தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களது மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

அத்தோடு கடந்த ஒரு மாத காலத்திற்குள் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட சகலரது மாதிரிகளையும் சேகரித்து அவற்றையும் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

இலங்கையில் நேற்றைய தினம் முதலாவதாக 'ஒமிக்ரோன்' தொற்றுக்குள்ளான நபர் இனங்காணப்பட்டதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த நவம்பர் 26 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் விடுக்கப்பட்ட அன்றைய தினமே சுகாதார அமைச்சினால் 'தென் ஆபிரிக்கா, போஸ்ட்வானா, லெசோதோ, நபீபியா, சிம்பாபே மற்றும் சுவாசிலாந்து' ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு தடை விக்கப்பட்டது.

இது தவிர கடந்த ஒரு மாத காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் தகவல்களை சேகரித்து , அவை மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாத காலத்திற்குள் இந்த நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் சுகாதார நலன் தொடர்பில் பரிசோதித்தல், மேலதிக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தல் உள்ளிட்ட நடைமுறைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இதுவரையில் எவரும் 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்படவில்லை.

இதற்கும் மேலதிகமாக அண்மைக்காலமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்பட்டவர்களின் மாதிரிகள் உடற்கூற்று பரிசோதனைக்காக ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பிரதி பலனாகவே ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்த நபரொருவர் 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதும் இது போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் ஏற்கனவே தொற்றுறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவராவார். எனவே சமூகப்பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவரது குடும்ப அங்கத்தவர்களும், நேரடி தொடர்புகளைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

எனவே மக்கள் இது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உலகலாவிய பெருந்தொற்று நிலையின் போது இவ்வாறான பிறழ்வுகள் நாட்டுக்குள் நுழைவது புதுமையானதொரு விடயமல்ல. எம்மால் செய்யக் கூடியது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மாத்திரமேயாகும். இதில் பிரதானமானது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதாகும். அத்தோடு சகலரும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகப் பேண வேண்டியதும் அத்தியாவசியமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right