(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வெறுமனே 2,500 போராளிகளுடன் செயற்பட்ட விடுதலைப்புலிகளுடன்,  75 ஆயிரம் பேர் கொண்ட இந்திய இராணுவத்தினால் தாக்குப்பிடிக்க முடியாதுபோன வரலாறுகளும் உள்ளன.

எனவே விடுதலைப்புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் நோக்கும்போது இது குறித்து எம்மால் பெருமைப்படவும் முடியும் என்பதை முன்னாள் இராணுவத்தளபதியும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

Articles Tagged Under: சரத் பொன்சேகா | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்லாது ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை பாதுகாத்தல், மனித உரிமைகளை பாதுகாத்தல் என்பவனும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையாகும். 

இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்னரை விடவும் 30 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பிற்கு எதற்கு இவ்வளவு பணம் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இது அர்த்தமற்ற கேள்வியாகும். 

யுத்தம் நிலவுகின்றோதோ இல்லையோ நாட்டின் இராணுவத்தை பலமாக வைத்திருக்க வேண்டும், சிறிய நாடாக இருந்தாலும் நாம் எவருக்கும் அடிபணியாத இராணுவமாக இருக்க வேண்டும்.  

1980 களில் விடுதலைப்புலிகளில் வெறுமனே 2,00 போராளிகளே இருந்தனர். ஆனால் 75 ஆயிரம் இந்திய இராணுவம் திட்டமிடப்பட்ட நகர்வுடன் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

ஆனால் 75 ஆயிரம் இந்திய இராணுவத்தினால் வெறுமனே 2,500 பேர் கொண்ட விடுதலைப்புலிகளுடன் தாக்குப்பிடிக்க முடியாது போனது. விடுதலைப்புலிகள் இலங்கையர்கள் என்ற ரீதியில் நோக்கும்போது இது குறித்து எம்மால் பெருமைப்படவும் முடியும்.

மேலும், தேசிய பாதுகாப்பு பலவீனமாக உள்ளதென்றால் ஒருபோதும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது, அதனால் தான் ஏனைய நாடுகள் எமது சுயாதீனதில் தலையிட முயற்சிக்கின்றனர். 

அதேபோல்  பாதுகாப்பு பலவீனமாகவுள்ளது என்றால் சட்டவிரோத செயற்பாடுகளும் நாட்டுக்குள் உருவாகாது என்றார்.