'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'ரெபெல்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ரெபெல்'. இதில் கதையின் நாயகனாக ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கிறார். 

அருண் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தின் நாயகனான ஜு. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், நலன் குமாரசாமி, கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் டி சிவா, சி.வி. குமார், ‘ரெபெல்’ படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனஞ்ஜெயன்,  நடிகர் ஆரி உள்ளிட்ட பலர் அதிதிகளாக பங்குபற்றினர்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான மூணாறு பகுதியின் சரித்திரம் மற்றும் நில அரசியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பேச்சுலர்', 'ஜெயில்', 'செல்ஃபி' என வரிசையாக வெற்றிப்படங்களை வழங்கவிருக்கும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகும் 'ரெபெல்' படமும் அவருடைய வெற்றிப் படங்களின் வரிசையில் இணைய வேண்டும் என பிரார்த்திப்போம்.