நடிகர் முகேன் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'மதில் மேல் காதல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

'வெப்பம்' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மதில் மேல் காதல்' இந்தப் படத்தில் பிக் பொஸ் பிரபலமும், 'வேலன்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் நடிகர் முகேன் ராவ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இவருக்கு ஜோடியாக 'பேச்சுலர்' பட புகழ் நடிகை திவ்யபாரதி நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, கே பி ஒய் பாலா, நடிகைகள் அனுஹாசன், கஸ்தூரி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கௌதம் ஜோர்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''முதல் பார்வையிலேயே காதலில் விழும் காதலர்கள், தங்களின் காதலை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள எத்தகைய மன போராட்டங்களை எதிர்கொண்டு, தங்களின் காதலை வாழ வைக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. மாநகர பின்னணியில் இளமை குறும்புடன் நகைச்சுவை ததும்ப தயாராகிறது. '' என்றார்.

படத்திற்கு 'மதில் மேல் காதல்' என பெயரிட்டிருப்பதாலும், நாயகனும் நாயகியும் உற்சாகமான தோற்றத்தில் இருப்பதாலும் இளைய தலைமுறையினரை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கவர்ந்திருக்கிறது.

இதனிடையே நடிகர் முகேன் பிக் பொஸில் பங்குபற்றி வெற்றி பெற்ற பிறகு நடிகராக அறிமுகமான 'வெற்றி' என்ற படத்தையும் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார் என்பதும், இவர் நடிப்பில் தயாராகியிருக்கும் 'வேலன்' விரைவில் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.