நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் முதலில் தயாரான 'அட்டக்கத்தி' படத்தை வெளியிட்டவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அப்படத்தின் வணிகரீதியிலான வெற்றிக்குப் பிறகு, கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை இயக்கும் வாய்ப்பை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு அளித்தார். 

இந்த வெற்றிக் கூட்டணி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார். 

இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' ஆகிய படங்களையடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் படத்தில், சீயான் விக்ரம் நடிப்பதால், இப்படத்தின் அறிவிப்பின்போதே இரசிகர்களிடத்தில் பாரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.