ஒரே விமானத்தில் அபுதாபி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில்

03 Dec, 2021 | 05:49 AM
image

(எம்.மனோசித்ரா)

இந்துமகா சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அபுதாபி செல்லவுள்ளார். 

இதன் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் அதே விமானத்தில்  பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Former PM meets President - NewsWire

'சுற்றுச்சூழல், பொருளாதாரம், பெருந்தொற்று' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் அதனை முன்னிறுத்தி ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

இம்மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயஷங்கர், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்தோடு நாளை சனிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

கடந்த 2016 - 2019 ஆம் ஆண்டு  வரையான காலப்பகுதியில் இந்து சமுத்திர மாநாட்டின் தலைவராகப் பதவிவகித்த ரணில் விக்ரமசிங்கவிற்கு, இம்முறை நடைபெறவுள்ள 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்பாட்டுக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

அந்த அழைப்பையேற்று அபுதாபி செல்லவுள்ள முன்னாள் பிரதமர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இந்து சமுத்திர மாநாட்டில் நிலைபேறான கடல்சார் வளங்களின் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தினால் சிறிய தீவுகள் மற்றும் கடற்பிராந்திய நாடுகளுக்கு ஏற்படும் தாக்கங்கள், இயற்;கை அனர்த்தங்களின் தாக்கத்தைக் குறைத்தல், நிறைபேறான எதிர்காலத்தை உறுதிசெய்யும் நோக்கில் பசுமை உற்பத்தியை ஊக்குவித்தல், கடற்சூழல் மாசடைவைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்சார் விடயங்கள் தொடர்பிலும் கொவிட் - 19 வைரஸ் பரவலின் பின்னரான பொருளாதார மீட்சி, இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் வர்த்தகப்பாதைகளை உருவாக்குவதன் அவசியம், இந்து சமுத்திர சக்திவலு பாதுகாப்பு உள்ளிட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பிலும் கொவிட் - 19 தொற்றினால் உலகநாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், சுகாதாரத்துறையில் காணப்படும் குறைபாடுகள், சமூக - பொருளாதார தாக்கங்கள், எதிர்கால சவால்கள் மற்றும் அவற்றுக்கு முகங்கொடுப்பதில் பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பெருந்தொற்றுப்பரவல் குறித்த விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right