(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனம் துறைமுகத்தை 35 வருடங்களுக்கு மாத்திரம் கேட்டிருந்த நிலையில், அதனை மறுத்து 99 வருடங்களுக்கு கேட்ட நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதுதொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில், அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன உரையாற்றிக்கொண்டிருக்கையில்,
அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் தற்போது கிடைக்கப்பெற்றுவரும் வருமானம் தொடர்பாகவும் கடந்த அரசாங்கம் அந்த துறைமுகத்தை 99வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியது தொடர்பாகவும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கையில், சபையில் இருந்த விஜேதாச ராஜபக்ஷ்,ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அம்பந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனம், இந்த துறைமுகத்தை 35வருடத்துக்கு 780 டொலர் மில்லியன் செலுத்துவதற்கு கேட்டிருந்தது.
என்றாலும் ஆட்சியில் இருந்த அரசாங்கம் 35வருடத்துக்கு கேட்ட நிறுவனத்துக்கு வழங்காமல் தற்போது வழங்கி இருக்கும் நிறுவனத்துக்கு 99வருடத்துக்கு வழங்கி இருக்கின்றது.
இதுதொடர்பாக அமைச்சரவையில் நான் பல விடயங்களை எடுத்துக்கூறினேன். அதன் காரணமாகவே நான் அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். அதுதொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எனவே அம்பந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனமே குறித்த துறைமுகத்தை 35வருடங்களுக்கு மாத்திரம் கேட்டிருந்த நிலையில், துறைமுகத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்காமல் 99வருடங்களுக்கு கேட்ட நிறுவனத்துக்கு ஏன் இந்த துறைமுகத்தை வழங்குவதற்கு தீர்மானித்தார்கள் என்பது தொடர்பாக ஆணைக்குழு ஒன்றையாவது அமைத்து இதுதொடர்பில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றார்.