(ஆர்.யசி)

உலகில் 24 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸ் தொற்றானது ஐரோப்பா நாடுகளில் கடந்த நவம்பர் மாதத்திலேயே பரவ ஆரம்பித்துள்ள காரணத்தினால் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கால தாமதம் என்றே கூறவேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள வைத்திய நிபுணர்கள், 'ஒமிக்ரோன் ' வைரஸை கட்டுப்படுத்த நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை முடக்குவது சாத்தியமில்லை என்பதையும் கூறியுள்ளனர். 

Articles Tagged Under: கலாநிதி சந்திம ஜீவந்தர | Virakesari.lk

இவ்வாறான நிலையில் இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று வராதென கூறவே முடியாது. இப்போது இல்லை என்றாலும் எதிர்வரும் காலங்களில் அடையாளம் காணப்படலாம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவரிகள் இதனை தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பார் பேராசிரியர் நீலிகா மலவிகே கூறுகையில்,

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே'ஒமிக்ரோன் 'வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகளில்  பரவியுள்ளதுடன் தற்போது வரையில் 24 நாடுகளில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே உலகில் வேகமாக பரவிக்கொண்டுள்ள வைரஸாக 'ஒமிக்ரோன் 'வைரஸை உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளப்படுதியுள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று எவ்வாறான தாக்கத்தை கொண்டுள்ளது, அதன விளைவுகள் எவ்வாறானது என்பது குறித்து இன்னமும் முழுமையான ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை, எனினும் ஏனைய கொவிட் -19 வைரஸ் தொற்றுகளை போன்று நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தாது, மாறுபட்ட தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக தென்னாபிரிக்க ஆய்வுகள் கூறுகின்றன.

அதேபோல் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மீண்டும் 'ஒமிக்ரோன் ' வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாகவும் கூறுகின்றனர்.

எனவேதான் ஒமிக்ரோன் வைரஸ் குறித்த அச்சுறுத்தல் விடுக்கும் நிலைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம் எடுத்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஏற்கனவே நான்கு வைரஸ் தொற்றுகளை உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் இது ஐந்தாவது அவதானம் மிக்க வைரஸாகும்.

அதேபோல் 'ஒமிக்ரோன் ' வைரஸை கட்டுப்படுத்த நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை முடக்குவது சாத்தியமில்லை, எம் சகலருக்கும் தெரிந்த டெல்டா வைரஸ் உலகில் சகல நாடுகளிலும் பரவியது.

இதன்போது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் முழுமையாக தமது எல்லைகளை முடக்கியும் அவர்களாக டெல்டா வைரஸ் தொற்றை தடுக்க முடியாது போனது.

எனவே ஒமிக்ரோன் வைரஸ் தொற்றும் ஏனைய வைரஸ் போன்றே பரவ முடியும். ஆகவே எல்லைகளை முடக்குவதால் மட்டுமே எம்மால் வைரஸ் தொற்றில் இருந்து விடுபட முடியாது.

இப்போது ஒமிக்ரோன் வைரஸ் குறித்து அவதானம் செலுத்தப்படுவதை போன்று எதிர்காலத்தில் வேறு வைரஸ் தொற்றுகள் உருவாகலாம்.  மக்கள் அடிப்படை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அதேபோல் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டே இதனை எதிர்கொள்ள முடியும்.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் இப்போது ஒமிக்ரோன் வைரஸ் பரவியதாக கூறப்பட்டாலும் இந்த வைரஸ் இரண்டு வாரங்களுக்கு முன்னரே பரவியிருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே குறித்த நாடுகளில் இருந்து மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னரே பல்வேறு நாடுகளுக்கு சென்றிருப்பார்கள். இவ்வாறான நிலையில் இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று வராதென கூறவே முடியாது. இப்போது இல்லை என்றாலும் எதிர்வரும் காலங்களில் அடையாளம் காணப்படலாம் என்றார்.

ஊடக சந்திப்பில் நிலைமைகளை தெளிவுபடுத்திய ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர கூறுகையில், உலகில் பரவும் எந்தவொரு வைரஸ் தொற்றும் இலங்கையில் பரவுகின்றதா என்பதை ஆராயும் தொழிநுட்ப வசதிகள் எம்மிடமும் உள்ளது, ஆகவே எம்மால் இதில் தடுமாற்றங்கள் ஏற்படாது.

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனரா,அவர்கள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்த ஆய்வு அறிக்கை நாளை (இன்று) எமக்கு கிடைக்கும், எதிர்வரும் நாட்களில் அறிக்கையை சுகாதார அமைச்சிற்கு வழங்க முடியும்.அதேபோல் ஒமிக்ரோன் வைரஸ் குறித்த ஆய்வுகளை  உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுத்து வருகின்றது,

அவர்களின் இறுதி அறிக்கை வரும் வரையில் எம்மால் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அதேபோல் சகல ஆய்வுகளும் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய வைரஸை  அடிப்படையாக வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே தடுப்பூசிகள் இதற்கு வெற்றியளிக்கும் என்பதே சகல வைதியர்களினதும் நிலைப்பாடாகும்.

சுகாதார தரப்பு எமக்கு கொடுத்த மாதிரிகளுக்கு அமைய அதன் பரிசோதனைகளில் இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது தெரிவிக்க முடியும் என்றார்.