(எம்.மனோசித்ரா)

இலங்கையில் ஒமிக்ரோன் பரவ ஆரம்பித்தால் டெல்டா பரவியபோது நாளாந்தம் பதிவாகிய தொற்றாளர்களை விட 5 மடங்கிற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகக்கூடும். 

அவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அது வைத்தியசாலைகள் உள்ளிட்ட முழு சுகாதார கட்டமைப்பிற்கும் பெரும் நெருக்கடியாகவே அமையும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

ஒமிக்ரோன் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டுக்குள் நுழையக்கூடும். எனவே வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் உட்பட சகலரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

காரணம் ஒமிக்ரோன் தென் ஆபிரிக்கா மாத்திரமின்றி மேலும் பல நாடுகளில் பரவியுள்ளது என்றும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் சிறிய கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தலைதூக்கும் நிலைமையே காணப்படுகிறது. அபாயம் மிக்க ஒமிக்ரோன் பிறழ்வானது தற்போது தென்ஆபிரிக்காவில் மாத்திரமின்றி பல நாடுகளிலும் பரவியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

இது அதிக மரபணுக்களைக் கொண்டிருப்பதால் அதிகளவில் பரவக்கூடியதாகவும் உள்ளது. இலங்கையில் டெல்டா பரவியதை விட வேகமாகப் பரவக் கூடியதாகும்.

எனவே ஒமிக்ரோன் பரவல் தீவிரமடைந்தால் சமூகத்திலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சகல வயதுப் பிரிவிலுமுள்ள தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பாரதூரமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். 

ஒரே நேரத்தில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளானால் வைத்தியசாலை கட்டமைப்புக்களும் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். எனவே வைரஸ் பரவ முன்னர் தடுப்பதே சிறந்த வழிமுறையாகும்.

இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட திரிபுகளிலிருந்து தடுப்பூசியின் மூலம் பாதுகாப்பினைப் பெறக் கூடியதாக இருந்தது. எனினும் ஒமிக்ரோன் பிறழ்வின் மூலம் தடுப்பூசியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகும் என்று சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். 

எவ்வாறிருப்பினும் தொற்றுக்கு உள்ளானால் தீவிர நிலைமையை அல்லது மரணம் வரை செல்லாமலிருப்பதற்காவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

இம்மாத இறுதியில் நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்பு என்பவற்றுக்கான கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக் கொண்டிருப்பர். இந்த கொண்டாட்டங்களின் போது அதிகளவானோர் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்வதோடு, மிகவும் அவதானமாகவும் செயற்பட வேண்டும். 

குறிப்பாக முதியோர் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும். முதியோர், சுகாதார ஊழியர்கள் மற்றும் சகல வயது பிரிவையும் சேர்ந்த தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

ஒமிக்ரோன் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டுக்குள் நுழையக்கூடும். எனவே வெளிநாடுகளிலிருந்து வரும் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் உட்பட சகலரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காரணம் இலங்கைக்கு வருவதற்கு 6 நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒமிக்ரோன் அவற்றுக்கு அப்பால் மேலும் பல நாடுகளில் பரவியுள்ளது என்றார்.