இராஜதுரை ஹஷான்

 கொவிட்-19 பெருந்தொற்று  தாக்கத்தினால்  உலகம் இன்று மிக மோசமான விளைவுகளுடன் போராடுகிறது.

தேசங்கள் குடிமக்களை இழந்திருப்பதுடன் சுகாதார சவால்களை கையாள்வதற்கு திணறிக் கொண்டிருக்கும் அதே வேளையில் பொருளாதார ரீதியில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

பேரழிவுகளில் இருந்து நாடுகள் தம்மை தாமே மீட்டுக்கொள்ள பல ஆண்டுகள் தேவைப்படும்.

நிலத்தில் புதையுண்டுள்ள கனியவளங்கள் அகழ்வு மற்றும் எரிபொருள் பாவனை என்பன சராசரி பூகோள வெப்பநிலையின் உயர்விற்கு பிரதான காரணமாக  அமைந்துள்ளன.

மக்கள் தொகை அதிகரிப்பு,மாற்றமடையும் வாழ்க்கை முறை,வளங்களின் அதிகப்படியான சுரண்டல்,பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்வு ஆகியவை உலகளாவிய சுற்றுச்சூழல் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.அத்துடன் நகரமயமாக்கல்,இயற்கைக்கு முரணான பயிர்ச்செய்கை என்பன சுற்றுச்சூழல் மாசடைவை துரிதப்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள சவால்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் உலகின் பெரும்பாலான  நாடுகளின் செயற்பாடுகளை முழுமையாக முடக்கியுள்ளது.மறுபுறம் காலநிலை மாற்றம் மனித குலத்தின் அழிவிற்கு வழிவகுக்கிறது.

இப்பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்க ஐந்தாவது இந்து சமுத்திர மாநாடு இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் ஆரம்பமாகிறது.

'சுற்றுச்சூழல்,பொருளாதாரம்,பெருந்தொற்று' என்பதே  இன்று ஆரம்பமாகும் இந்து சமுத்திர மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டின் தலைமைத்துவ பதவி இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,சிங்கப்பூர் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்,ஓமான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சய்த் பத்ர் பின் ஹமத் பின் ஹமூத் அல் புசைதி ஆகியோருக்கு துணைத்தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான  ரணில் விக்ரமசிங்க, இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரபு,பங்களாதேஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷஹரியார் ஆலம்,இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ,செயலாளர் (கிழக்கு)வெளியுறவு அமைச்சு,இந்திய அரசு இந்தியா –ரிவா கங்குலி தாஸ் ஆகியோர் மாநாட்டின் ஏனைய உறுப்பினர்களாவர்.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாளை மாநாட்டில் ஆரம்ப  உரையாற்றுவார்.முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க 2016 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்து சமுத்திர மாநாட்டின் தலைவர் பதவி வகித்தார்.அவர் நாளை மறுதினம் மாநாட்டில் உரையாற்றுவார்.