இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்கா உடன்படிக்கையானது இரண்டு நாடுகளும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும் ஒன்றாகும்.  இலங்கைக்கு இது வேண்டாம் எனின் நாங்கள் எந்த வகையிலும் இதில் அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம். எதனையும் திணிக்க மாட்டோம். இரு தரப்பு பரஸ்பர புரிந்துணர்வுடனேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்  என்று இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என்பதை இரண்டு தரப்புக்களுமே தீர்மானிக்க வேண்டும். ஒரு வழிப்பாதையில் எந்த செயற்பாடும் முன்னெடுக்கப்படாது. இரு தரப்பு இணக்கப்பாட்டு  உடன்படிக்கையே முன்னெடுக்கப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார். 

எட்கா கைச்சத்திடப்பட்டால் 120 கோடி மக்களை கொண்ட சந்தை ஒன்று உங்கள் நாட்டில் கிடைக்கும். உங்களது அனைத்து பொருட்களும் சேவைகளும் இந்தியாவிற்கு திறந்துவிடப்படும். உங்களது விவசாயப் பொருட்கள் இந்தியாவிற்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சம்பூர் விடயத்தில் இலங்கையின் தேசிய முக்கியத்துவம் கவனத்திற் கொள்ளப்பட்டது. இலங்கை அனல்மின் உற்பத்தியிலிருந்து வெ ளியே செல்வதற்கான தேசிய முக்கியத்துவம் வெ ளிக்காட்டப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.  எனினும் இது இலகுவான விடயம் அல்ல. கடினமாக இருந்தாலும் இந்த விடயத்தில் இலங்கையுடன்  ஈடுபாட்டுடன்  செயற்பட வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கின்றது.  ஐயோ இப்படியாகிவிட்டதே என்று இந்தியா கருதவில்லை. நாம் இந்த விடயத்தில் தேசிய முக்கியத்துவ விடயத்தை பாராட்டுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் கொழும்பில்    சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடான இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அதன்  பின்னர் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிகையிலேயே இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.