(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று கூடிய வேளையில், வெடிப்பு சம்பவங்கள் குறித்த காரணிகள் ஆராயப்பட்டுள்ள நிலையில்  மொறட்டுவ பல்கலைக்கழக ஆய்வறிக்கை இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கவுள்ளதாகவும், அறிக்கையின் காரணிகளை கவனத்தில் கொண்டு அடுத்தகட்ட தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக நாட்டில் இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள் குறித்து நாட்டில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தடுமாறிக்கொண்டுள்ள நிலையில், நிலைமைகளை ஆராயவும் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கவும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டம், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் தலைமையில் நேற்று காலையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, லிற்றோ மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது அண்மைக் காலமாக பதிவாகி வரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். 

இவ்வேளையில் எரிவாயு சிலிண்டரில் கலவை அளவு மாற்றத்தினாலேயே இவ்வாறான சம்வங்கள் நடப்பதாக பெரும்பாலானவர்கள் தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை செவ்வாய்க்கிழமையில் மாத்திரம் நாடு முழுவதும் இதனுடன் தொடர்புடைய 34 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளதுடன். 

இத்தகைய பிரச்சனை நிலைமையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொண்டால் ஆரோக்கியமானது எனவும் எதிர்க்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிவாயு நிறுவனங்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் உள்ளிட்ட சிலர், சிலிண்டரில் பொருத்தப்படும் ரெகுலேட்டர் மற்றும் குழாயில் உள்ள பிரச்சனையால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தக் கூட்டத்தில் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் எரிவாயு கலவையில் மாற்றம் செய்திருப்பதன் காரணமாக இவ்வாறான வெடிப்புகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொதுவான கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னெடுத்துள்ள ஆய்வறிக்கை தற்போது மொரட்டுவ பல்கலைக்கழக ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர்களின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளதாகவும், சபைப்படுத்திய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.