(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் தெள்ளு பூச்சி கடியால் 260 மாணவிகளில் சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மகளிர் வித்தியாலயத்தில் தரம் 1 ஏ.பீ, தரம் 2 ஏ.பீ மற்றும் தரம் 5 ஏ.பீ ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.த உயர் தர கலை பிரிவு மாணவிகள் கற்கும் வகுப்பிலும் தெள்ளு பூச்சிகள் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாணவிகளின் வகுப்பறைகள் மாற்றம் செய்யப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக இன்று முதல் இரண்டு தினங்களுக்கு குறித்த வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாளை காலை பொது சுகாதார பரிசோதகர் ஊடாக தெள்ளு பூச்சிகள் அழிக்கும் பணிகளிலும் ஈடுப்பட போவதாகவும், பூரண சுகாதார பரிசோதனையின் பின் மீண்டும் குறித்த வகுப்பறைகள் இயங்கப்படும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.